அமலன் கவிதைகள்.

23 என்னவள்

                               23.என்னவள்                             

கானத்தின் பரவசமான வருடலொப்ப 
    காரிகையுன் பிரதிபலன்பாரா அன்பெனும் 
வானத்தின் எல்லையை வரையறுக்க
   வானுனகிலும் எவருமில்லையடி சகியே
ஈனத்தின் கொடுங்கோன்மை இருள் சூழும்
   ஈழத்தில் ஈசனும் வாழாதிருக்க துயரெனும்
ஊனத்தின் வலிசுமந்த என்மதில் அமுது
     ஊற்றாய் பிரவகிக்கும் தேவதைநீயடி சுகியே
மானத்தின் வாழ்வினைச் சூதுகவ்வும்நிலையில்
   மானிடம் மறந்த மனிதமெனும் உயிர்ப்
பானத்தின் தேன்மதுரமாய்ச் சுகித்து என்ஜீவனெனும்
   பாவையே இன்னொரு பிறவி வேண்டுமடி....
   பாங்குடன் உன்தாயாய் பிறந்து என்கடந்தீர்க்க....!
22.பிரான்
கூனிக்குறுகிக்கும்பிட்டுக் 
   கூப்பிய கரங்கள்  இயலாமையில்-உம்
ஊனினை எரிதணலுக் கொப்புவித்து
  ஊழை மிகுந்தேறி பன்னிருமாதங்கழிய
தேனினை எள்ளுடன் இறைத்து
  தேடித்தேடியே நும்நினைவினைச் சுமந்து
கானின்  சலத்தாரையாய்  தெளியாதெம் மனம்
   காணா ஞானோதயம் எட்டா  ஏற்காவெனின்
வானிற் துயிலும் இறைவனை இறைஞ்சி
  வாடிநிற்கும் நும்மக்கள் நாம்.......!

 

21.மீண்டும் வரும் நாளை என்றுமே நாடும் !
தீயெனத்தீயும் நாவும் தீவினை நீங்கி
  தீர்க்கதரசி யும்முன் பணிவினை நாடும்
தாயெனத் தாங்கின்  வேற்றுமை நீங்கி
   தாவிடும் நேசப்பூக்கள் உம்அன்பினை நாடும்
சேயெனத் தாங்கின் பிரிவினை நீங்கி
   சேனைகளகூட உம் அறிவினை நாடும்
வாயெனத்  கட்டளை மேவிய தன்னுடல் நீங்கி
   வானவன் மலரடி மாண்பினை நாடும்
நீயெனத் துடிக்கும் எம் வாதை நீங்கி
  நீவீர் மீண்டும் வரும் நாளை என்றுமே நாடும் !
இன்னுயிர்

                               20.இன்னுயிர்                             

நிலாவுக்கு தன்னொளி இல்லாப் பிரதிபலிப்பே
       நிஜமென்ற நிலையே இறையென்றிருப்பின்
சூலானதெல்லாம் மரணத்தின் பாற்
    சூட்சுமம் ஏதுமின்றி சேருமதே விதியென்றிருப்பின்
உலாக்காணும் மனித இனம் எவ்விதம் காலா
    உனைவெல்லுமென்றென வழியொன்றிருப்பின்
குலாவி கும்பிட்டு பண்டமாற்றாய் பணிவிடையாற்றி
    குவந்த மலரச்சனை வேண்டியும் முடியாதென்றிருப்பின்
காலா உன் கயிறு தாண்டி கடவுள் எவரும்
    காவல்தந் துறுநிலைமாற்ற வியலாதென்றிருப்பின்
பலாவின் சுளையொப்ப இனிக்கும்தன்னுயிரையெண்ணிப்
    பரிதவிக்காது எவ்வுயிரும் தன்னுயிர் என்ற அன்புவழியொன்றிருப்பின்
                      அஃதன்றி வேறென்ன பராபமே.....!
திருக்கம்
                 19.திருக்கம்
                ------------
இகழ் ந்திருக்கும் வையகம் பொய்யென்னும்
  இருளின் ஆதிக்கத்தில் தூய மனதொறுத்து
அகழ் ந்திருக்கும் மாயக்குழியில் மெய்யென்னும்
   அக்கினி தள்ளி அதன் மெய்யொறுத்து
உகழ் ந்திருக்கும் கொடுமையின் சேய்யென்னும்
  உடலூநர் எனத் திருக்கம் ஙோள்கலொறுத்து
திகழ் ந்திருக்கும் மெய்யுணர்வு மெய்யென்னும்
   திடம்கொள்ளும் அஃதன்றி வேறென்ன பராபரமே...! 
 
மாறிடுவோம் நன்றே!
18.மாறிடுவோம் நன்றே!
-------------- --------
பொய் யென்று உரைதார் ஆண்டார் பொருள் புரிந்தும்
    பொறாமையொடு பேதைகளாய்
மெய் யென்று கொண்டார் ஆண்டார் பாதகம் அறிந்தும்
    மெத்தனம் மிக்க மேதைகளாய்
செய் யென்று வகுத்தார் ஆண்டார் இயலாமை தெரிந்தும்
    செருக்கு மிகு தீதைகளாய்
பெய் யென்று உரைத்தார் ஆண்டார் தூறாதென் றுணர்ந்தும்
    பெருமையொடு பொய்யுரைக்கும் காதைகளாய்
கொய் யென்று பகர்ந்தார் ஆண்டார் மும்மலம் அஃதை துறந்தும்
   கொஞ்சிடும் தேவ தத்தைகளாய் - மறுத்து
உய் யென்று எழுந்தார் தமிழர் தாம் தெளிந்ததும்
   உலகின் சீரிய மனிதத்தின் விதைகளாய்
வெய் யென்று ஒளிந்தார் தமிழர் அன்பொளி கிளர்ந்ததும்
   வெறுமையின் நிறைவில் பண்பின் மேதைகளாய்
தொய் யென்று மறந்தார் தமிழர் ஒற்றுமை அஃதை துறந்ததும்
   தொலைத்தார் அனைத்தும் அடிமைப் பேதைகளாய்………!
இகம்
 
             17.இகம்
இன்முகம் காட்டிப் பாசத்தோடிந்த
   இகம் தீரும்வரை வாழத்துடிக்கும்
சன்மார்க்க நெறியேதும்கூடப் பகராத
  சத்திய வாழ்வியற்றும் உத்தமரையொப்ப
பன்முக வாழ்வுதனை மறுத்து வாழும் – அந்த(ப்)
  பவித்திர வாழ்வியல் புனைய வேண்டி
வன்வழி தவிர்த்தின்ப அறவாழ்வுக்காய்
  வழிசமைத்திட இவ்விம்மையே கரைந்தோட
மன்னுயிர்க்கு அன்பே கற்பென்றுணர்வாய்
  மற்றன்றி வேறென்ன பராபரமே……! 
அன்புவழி
 
               16.அன்புவழி
துடியிடை மாதரின் முத்தங்களில் கிளர்ந்து
   துகிலுண்ணும் பெருநெருப்பெனும் காமத்தில்
மடியுத்தமேற்றிப் புணர்ந்து  ஈருடல் கூடிடும்
  மன்மத சிற்றின்பம் மறுத்துத் தவமியற்றும்
விடியலைத் தேடிய பஞ்சமா பாதகம் மறந்த துறவிகள்
   விரும்பினார் வேறு பிறப்பற்ற இறைபதமெய்த
முடிவற்ற முடிவிலிச் சக்தியைக் கடவுளாய்
   முடித்தார் வேதமியற்றி அஃதை நெறியாயியற்றி
கடிவாளத்தின் நீட்சியாய் பக்தியே வாணிகமாய்
  பரவசமே மதவெறியாய் தலைகீழ் நிலையிப்போ
அடிமைத்தன சடங்குகள் சாதிய சம்பிரதாயங்கள் மீறியே
   அன்பின் வழிகாண் இறைபதமெய்த வேறென்ன பராபரமே.!
வைகாசி 17
 15.வைகாசி 17
சிந்திய குருதியும் ஒடிந்த அவயவமும் 
   சிறிதாய்ப் பற்றிய உயிருமாய் உம் 
அந்திய கால இறுதிக் கணங்களை 
  அன்னியக் காலடிகளில் முடிக்கும்போது 
பிந்திய பொழுதில் பிரவகிக்கப்போகும் 
  பிரியமான உம்முயிர்த் தேசக் கனவு 
பந்திய கூட்டத்தின் ஏக்காளம் தாண்டி 
  பரவசமாய் உம்மனம் விரிந்திருக்கும் 
கெந்திய மனமுடை சோதர வஞ்சகர் 
  கெடுத்தாளத் துடிக்கும் வல்லரசுகள் 
முந்திய அவர் நலன்களுக்கு நீங்களா இரை 
  முரண்படாய் போனதன்றோ உம் உயரிய தியாகம்......!
அப்பால்...?!
 
           14.அப்பால்...?!
அருகிய மனித நேயம் வீரியம் மிகும்
 அரக்கத்தனம் அதற்கும் அப்பால்
கருகிய மனிதமனம் கொடுமை மிகும்
  கடும் சினம் இதற்கும் அப்பால்
மருகிய மனநோய் சிறுமை மிகும்
  மதியின் குரூரம்  அதற்கும் அப்பால்
பெருகிய வஞ்சகம் வீரியம் மிகும்
  பெண்ணாசை இத்தனைக்கும் அப்பால்
உருகிய பேரன்பு நேசம் மிகும் பாசம்
  உம் தியாகம் அவற்றுக்கும் அப்பால் 
வெருகிய மனம் மாற்றி தெளியாவிடின்
   வேறென்ன இதற்கு அப்பால்...?!
துணை
             13.துணை
குரலின் இனிமை செவிவழி புகுந்தொரு
    குவம் மலர்ந்த பரவசமாய் என்மனச்
சாரலின் இனிமையாய் உயிர்நுழைந்தென்
     சாகசமாய் எனைக்கொண்டு என்துயற் 
தீரலின் காரணியாய் பராமரிப்பின் திவ்யமாயென்
    தீர்க்கத்தின் மூலமாய் உயிரின் பாகமாயென் பாசத் 
தூரலின் அடைக்கலமாய் ஊடலின் தித்திப்பாயெழும் 
    தூய பாசவலையில் பிணைப்பில் எம்முயிர்ச் 
சேரலின் பாசவொளி பிரகாசித்திட இனியொருபிறப்பிருப்பின்
    சேயாய் பிறந்திடு உன் தாயாய் என் கடன் தீர்க்க...!
சபலம்
               12.சபலம்
சில்லென்ற பனிக்காற்றின் பரிசம் மேவியவள்
     சிற்றாடை மறைக்கா வுடற்பாகம் கண்டு
 உல்லாச விழிக்கணை தொடுத்து
     உள்ளூரத் துடிக்கும் காமத்தின் தாவலில்
 கல்மிசம் மிகுந்துவரும் ஆண்மனத்தின் கற்பென்ற
     கடப்பாடு உடைப்புற்று போகுமங்கே
 வல்லுறவின் நிகராய் தினமும் கடப்பிழந்து
     வலிய வேடமிடும் கற்புடை மாந்தரா நாம்...!
மழலை
              11.மழலை
துணிந்தென்வதனமதைக் கீறி
     துடிப்பாய் தனையென்மேல்
திணித்தென் தளிர் மேனி ஏறி
     தினவோடு பரவியென்மேல்
கேணி மேவிய தெப்பமாய் பீறி
     கேளிக்கையூட்டி வீரியம் மிகவாகி
அணிந்த என் நூலாடை மீறி
      அழுத்தி யென் மருமம் தேடும்
மணியே பசிதீர பருகு இடம் மாறி
      மறுமை தீர வந்த  என் மழலையே....!
கர்த்தர்
 
          10.கர்த்தர்
சாதிக்கத்துடிக்கும் மனித மனம்
  சாத்தியமற்றுப் போகையில்
விதியென்றுணர்வுற்று விண்ணுறை
   விற்பன்னரின் அடிதொழுது
வேதியர் யாகமும் பிரார்த்தனை
   வேள்வியும்  திருப்பலியுமென்று 
மதியின் நுட்பம் மாசில்லா புனிதனை
   மகிழ்விக்க முனைந்தும்
புதிதாய் மாற்றமேதும் கூடாமல்
   புதிராய் தோன்றும் பூவுலகில்
பதிவெறுத்து நாத்திகராவர் பலர்
  பதில் தேடி துறவிகளாவர் சிலர்
இதிலொன்றும் இசையாமல்
  இன்னலில்  திளைத்தும் துவளாமல்
கதியற்ற மானிடற்காய் உயிர்தந்த
  கருணைக்கடலுக்கு நிகரேது இவ்வுலகில்…?!
மாய விடுதலை
      9.மாய விடுதலை
    நஞ்சினை ஆரமாக்கி ஆற்றல்மிகு       
      நற்றமிழ் வீரர்  பிறர் தாகத்திற்காய்                   
   வெஞ்சமரில் துவண்டார் மடிந்தார்
      விடுதலை என்ற ஆகுதி வேள்வியில்
   கஞ்சிக்கே போராடும் ஏழைத்தமிழர்
      கற்பனைக்கெட்டா சித்திரவதையில்
   வஞ்சிக்கப்பட்டார்  அந்த விடுதலை என்ற
      வானவிற் சொற்பன வேள்வியில் 
   அஞ்சிப் புலம் பெயர்ந்தோர் அகதியாய்
     அடுத்தவன் உதவிட வெல்வோம் என்று 
   கொஞ்சமாய் ஏமாந்து தம்பொருளிழந்தார்-அந்த
      கொடும் விடுதலை எனும் பந்தய வேள்வியில்
   எஞ்சிய ஈழத்தார் தம் வாழ்வு எதிலிகளாய் 
      ஏக்கமாய் இருப்பே கடினமாய் கனக்கயில்
   வாஞ்சயற்ற அரசியல் சாக்கடையின் பதவி
      வாடையில் அரக்கத் தலைமைகள்
   மஞ்சமிட்டிருந்து மீண்டும் அழைப்பது-அந்த
      மனிதவதை எனும்  மாயவிடுதலையை யன்றோ..!. 
கடவுளும் மனிதவாழ்வும்
    
       8.கடவுளும் மனிதவாழ்வும்
மால் ஒப்ப ஆணினம் தந்து மாண்பாய்
   மானொப்ப பெண்ணினமீந்து
பால் ஒப்ப மனமளித்து அதன்
   பாதை மாற்ற பகை எனும் சினமீந்து
வேல் இனும் கூரிய ஆசை தந்து அதன்
   வேட்டைப் பொருளாம் செல்வமீந்து
கால் ஊன்ற புவி தந்து அதை மாற்ற
  காலம் எனும் இயற்கையீந்து
கோல் ஒச்சும் இறைவன் எனும்
   கோமான்  மானிட வாழ்வுதனை
நால் திசை நாடோடியாய் கண்டும்
   நாதியற்ற ஏதிலியாய் பார்த்தும்
சால் ஒப்ப கவ்வும் அவர் துயரத்திலும்
  சாதுவாயிருப்பது ஏனென்றெனில்
சேல் விழிமாந்தரின்பால் ஆளுமையற்ற
  சேராநிலை கொண்டதனால் தானோ.?
கண்ணியம்
 
            7.கண்ணியம்
கற்பெனக் கொள்க வாய்மையை தவறின்
  கணப்பொழுதும் கருணை யின்றின்
பற்றென வரும் பாவங்களைப் பற்றின்
  பரிதாபமா யுளமதின் நிம்மதி நீங்கின்
சற்றெனத் துவளும் இன்னுயிர் வற்றின்
  சர்வேசனாலும் காக்க அல்லாதே அங்கின்
சிற்றெனச் சிதறும் சிற்றின்பம் துறக்கின்
  சிதமே வாழ்வின் கருவாய் ஓங்கின்
போற்றேனச் சாடும் மனச்சாட்சி தாங்கின்
  கண்ணியமென்பேன் அஃதே தவமுமென்பேன்..!


தாயுமானவன்
 
       6.தாயுமானவன்
வீரம் பயமில்லையென்ற பாசாங்கு-அதை
  விம்பமாய் அகமதில் கொண்டு
தீரரென வந்தார் சென்றார் வையமதில்
   தீவினை மட்டும் தீர்ந்ததில்லை
சோர அரசியல் சதிகளீந்த -ஏதிலி
    சோக வாழ்வை அவலமாய் உவந்த
சூரரின் முற்றுகை தகர்த்திட ஓர்
   சூரியன் சூல் கொண்ட மானிடனாயவன்
ஆரம் நஞ்சினானாற் சூடினான் - தன் 
   ஆளுமைதனை மூலதனமாய் 
ஊரழைத்து கொண்டான் சமர்த்தான்
    ஊழியனாய் பிறர் தாகத்திற்கு - பெரு
நரகமதை ஆதிக்கத்திற்குணர்த்தி
  நல்லொழுக்கமதை உலகுக்குணர்த்தி
ஈர நெஞ்சன் வென்றான் எம் மனம் - அவ்வீர
   ஈழவன் என்றும் வாழ்க வளமுடன் 
மழலை
 
       5.மழலை
நாடித் துடித்தென்னுயிர் காதலால்
    நாளும் புறநானூற்றின்
கோடி வீரனாய் காத்திருத்தலெனும்
    கோதின் வேள்வியி லுருகி
தேடித் தொலைத்த எம்
  தேமதுர கணங்களை மீட்டியே
சோடி சேரா வஞ்சியுந்தன்
  வனப்பெழில் பருகி யெனை
சூடித் திளைதுன் மடிமீதுறங்கும்
   கூரிய சாமரக் கனவுகள் 
சாடி யென் மனச்சுவர் வருட
   சாதிக்க ஏதும் வழியற்ற
தூடி மழலை நானடி
  பேரெழில் ஈழம் என்ற உனக்கு....!
இறுதி அஞ்சலி
 
           4.இறுதி அஞ்சலி
முற்றா காலையில் வெண்பனிச்சாரலில்
   முழுதாய் கைவிட்டார் எம்மை – அந்த
வற்றா வளமிகு நாட்டின் சாலையில்
  வலியுற்ற ஏதிலி கூட்டமாய்.......
பற்றா யென் மனம் வாடித்திகைக்கயில்
   பரிவுடன் உந்தன் நேசமனம் துணைவர  
தொற்றா திடமனம் படைத்து 
  தொட்டோம் எம் பயண இலக்குகளை 
கீற்றா யும்முடை நினைவுகள்  
  கிளறும் தேடலெனும் ஆவலுடன்
காற்றா யென் காலங்கள் 
   கடப்புடன் கழிந்திருக்கயில்
ஏற்றா காலன் உம்முயிர் கொண்டான்
  ஏகன் நீரென்ரறியாமல் தந்தேன் இறுதி அஞ்சலி.......!
சிறைப்பறவை
 
      3.சிறைப்பறவை
நிறைந்த நற்பண்பால்
            நிகரில்லா குறும்புகளால்
கறையில்லா என் மனதை
            கவர்ந்தீர் காதலுற்றேன்
குறையின்றி அன்பு கொண்டு
            குதூகலத்தில் திளைக்கயில்
முறையற்ற செயல்புரி
            மூடரின் உயிர்களை
சூறையாடுவேன்  என்று
           சூளுரைத்துச் சென்றீர் நாடுமீட்க
பிறைபோல் நான் தேய்ந்து 
          பித்தாகி வாடுகையில்
பாறை மனதினராய் எனை
         பாடாய் படுத்தும் பெற்றோர்
அறை ஒன்றில் என் வாசம்
       அழுகிறேன் ..துவழ்கிறேன்
இறையென்றுமை எண்ணி
       இன்னலுடன் வாடுமிந்த
சிறைப்பறவை காத்திருக்கும்
       நீங்கள் மீட்கவரும் காலம் நோக்கி.......!



கடவுள்
 
           2.கடவுள்
அண்டசராசரங்கள் அகிலம்
    அனைத்தையும் ஆளும்-அந்த
விண்ணகத்துறையும் விற்பன்னர்
      விளம்பினார்  முன்னொரு யுகத்தில்
உண்மையென்று உரைப்பவரின்
    உறுதியற்ற கதைகளில் சாத்தானாம்
புண்ணிய புருஷனின்  விரோதியாம்
     புல்லராம் அரக்கராம் நரகமாம்
கண்ணிய வாழ்வுக்கு வழிகாட்ட
      கனவானைகூட வன்முறையாளனாய்
பண்பாடும் மார்க்கங்கள் வேண்டுமா
     பவித்திரனாம் அன்பான ஏகாந்தன்-அவன்
தண்நிழலடி காண அன்பு செய்
     தவிர வேறொன்ன பராபரமே......!

திராவிடர்
 
           1.திராவிடர்
ஞானிகள் வாழ்வியல் சொன்னார்கள்
  பேதைகள் தம்மை உணர்ந்தார்கள்   
கூனிய வீரம் நிமிர்த்தார்கள் 
     தீரர்கள் களம் வென்றார்கள்
 தேனினிய தீந்தமிழ் வளர்த்தார்கள்
    இறைதுயில் பல நாட்டினார்கள்
வானியல் முக்காலம் கணித்தார்கள்
   வேதியல் புதுமை படைத்தார்கள்
இனியன எல்லாம் இயற்றினார்கள்
    ஒற்றுமை ஒன்றை மறந்தார்கள்
சூனிய பகையில் வெந்தார்கள்
  அடிமைக்குழியில் புதைந்தார்கள்-மீண்டும்
ஞானிகள் ஒற்றுமை உரைக்கிறார்கள் ஆனால்
    பேதைகள் தம்மை உணரமுற்படவில்லை.........!  
Share