வான்புகழ் பெருமை கொண்ட வட்டூரின் மாண்புமிகுமிகு ஆளுமைகள்
திரு.செல்லையா அரியகுணசிங்கம்
(சிந்தனையாளர் ,மேனாள் ஆசிரிய ஆலோசகர்,விரிவுரையாளர்,கவிஞர், கணித ஆசிரியர்)
மாணவ சமுதாய நலனில் அக்கறை செலுத்தி வரும் ஆசிரியர்களை மாணவர்களும்,பெற்றோர்களும், சமூகமும் என்றென்றும் மறப்பது இல்லை,இவ்வாறு அனைவராலும் போற்றப்படுகின்றவர்களில் ஒருவர் தான் எங்கள் மண்ணைச் சார்ந்த சமூக ஆர்வலர்,கவிஞர் ,ஆசிரியர் திருமிகு செல்லையா அரியகுணசிங்கம் அவர்கள் என்றால் மிகையாகாது.
யாழ்.மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்று சித்தியடைந்த ஐயா செ.அரியகுணசிங்கம் அவர்கள் கொழும்பு பரதேனியா (Peradeniya) பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை பயிற்றார்.பொது விஞ்ஞான கணிதத்தில் இளநிலை சிறப்பியலுடன் வெளிவாரி வித்தக தன்மை பெற்ற ஐயா அவர்கள் தன் அளப்பரிய கணித ஆற்றலால் பல ஆக்கபூர்வ முயற்சிகளை மேற்கொண்டார் .ஆசிரியப் பணியினில் தன்னை அர்ப்பணித்த ஆசிரியர் ஐயா அரியகுணசிங்கம் அவர்கள் எமது மண்ணில் ஒரு வரமாக வந்துதித்த ஆசிரியர் என்றால் மிகையாகாது.
மாணவர்களைப் பொதுத்தேர்விற்குத் தயார்படுத்த காலை, மாலை என சிறப்பு வகுப்பு வைத்து தன் வேலை நேரங்களையும் தாண்டி செலவிடும் இவர்.ஆற்று நீர் போல் இங்கும் அங்குமாய் ஓடி ஓடி கற்பிக்கும் காட்டாறு. தோற்றத்தில் எளிமை கற்பித்தலில் தெளிவு, நடையில் சுறுசுறுப்பு, உடையில் அழகு,பேச்சில் கருணை, கண்டிப்பில் உச்சம் என இவருடைய குணாதிசியங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
எப்பொழுதும் அனைவரோடும் இன்முகத்தோடுபழகும் பண்பு நிறைந்து காணப்பட்ட இவர் பெரியோர்கள் பால் மதிப்பும் சிறியோர்கள் பால் அன்பும் கொண்டவராக மிளிர்ந்தார்.
இத்தகைய சிறப்பு மிக்க ஐயா திரு.அரியகுணசிங்கம் அவர்கள் கொழும்பில் உள்ள திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றி மாணவர்களின் உயர்வுக்கு வழிகோலினார் . மாலைதீவு நாட்டிலும் கணித ஆசிரியராக கடமையாற்றிய இவரின் ஆளுமை,கல்வித் திறன் அறிந்து அங்குள்ள கல்விமான்கள் பாராட்டியதும் மறக்க முடியாத நிகழ்வாகும் . ஈழத்தின் பல பாகங்களில் கணித ஆசிரியராக வலம் வந்ததுடன்,யாழில் புதிய கல்வி நிலைய இயக்குனராக பொறுப்பேற்றார் . மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் கணிதபாடம் பற்றிய பல அரிய நூல்களையும் , பயிற்சி நூல்களையும் எழுதிய ஐயா திரு.செ.அரியகுணசிங்கம் அவர்கள் தனது பிறந்த மண்ணில் உள்ள வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் உயர்தர வகுப்பு (A/L) கணித ஆசிரியராகவும் ,ஆசிரிய ஆலோசகராகவும் கடமையாற்றிய காலங்களில் நல்லொழுக்கம், பண்பாடு, அறிவு, மரியாதை, கல்வி என அனைத்தையும் தனது மாணவ சமூகத்திற்கு கற்றுக்கொடுத்ததுடன் அனைவரிடமும் நன்மதிப்பினைப் பெற்றார் .
கணிதப் புதிர்களுக்கு கணணி கல்குலேற்றர் இயந்திரங்களின் வேகத்தை முந்தி விடையளிக்கும் திறமையினை,ஆற்றலைக் கொண்ட ஐயா திரு.அரியகுணசிங்கம் அவர்கள் தன் கணிதத் திறமையை வெளிப்படுத்தும் முகமாக தாயகத்தில் ஆசிரியராக கடமையாற்றிய காலங்களில் யாழ்.மாவட்ட கல்லூரிகளுக்கிடையேயான பொருட்காட்சியின் போது கணித விஞ்ஞானத்தில் பல புதிர்களை தானே உருவாக்கி அதற்கு விடையும் கண்டுபிடித்து மாணவ உலகு பயன் பெறும் வகையில் அதனை முன்வைத்தமையை அன்றைய கணித மேதைகளும் ,அறிவு உலக ஆன்றோர்களும் பாராட்டி வாழ்த்தியமை ஐயாவின் ஆற்றலுக்கு மேலும் மகுடம் சூட்டியது எனலாம் .
தேர்ச்சிகளை மையப்படுத்தி கல்வியை முன்னெடுப்பதில் ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது .எனவே தேர்ச்சிகளை உரியவாறு விளங்கிக் கொண்ட ஆசிரியர்களாலே தேர்ச்சி மையக் கல்விகளை வழங்கமுடியும். அந்த வகையில் ஆசிரியர்களை போதிக்கும் கல்வியாளர்களின் ஆலோசனைகளின் பங்கும் முக்கியமானதாகிறது அவ்வகையில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உரிய முறைகளில் ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுத்ததுடன் ,கல்வி ஆலோசகராக பணியாற்றிய காலங்களில் ஆலோசனைவழங்கிய ஐயா அரியகுணசிங்கம் அவர்களின் சிறந்த சேவைக்கு ,திறமைக்கு சான்றாக ஐயாவோடு பணியாற்றிய கல்வியாளர்களும்,பயின்ற பயன் பெற்ற மாணவர்களும் இருக்கின்றனர் எனலாம் .
தகைமைகளும் செயற்பாடுகளும் ஐயா செ.அரியகுணசிங்கம் அவர்களின் சேவையின் அளவுகோல்களாக விளங்கியது எனலாம் ஆசிரியராக ஆசிரியர்களுக்கு போதிக்கும் விரிவுரையாளராக , ஆலோசகராக பன்முகப்பட்ட பணிகளை ஆற்றிய அனுபவங்களைக் கொண்ட ஐயா திரு.செ. திரு.அரியகுணசிங்கம் அவர்கள், கல்வியின் நோக்கம் மனிதர்களிடமுள்ள பூரணத்தினை வெளிக்கொணர்வது என்ற சுவாமி விவேகானந்தரின் கூற்றுக்கமைய மாணவ சமுதாயத்தினை சமூகப் பொருத்தப்பாடுடையவர்களாக வருவதற்கும் ஊன்றுகோலாய் இருந்தார் என்றால் மிகையாகாது.
காலச்சக்கரத்தின் சுழற்சியில் பிரித்தானிய மண்ணில் புலம் பெயர்ந்தாலும் அங்கும் ஐயா திரு.செ.அரியகுணசிங்கம் அவர்கள் தனது ஆசிரிய பணியினைத் தொடர்ந்து வருகின்றார். ஒரு நல்லாசிரியராக வாழ்ந்து வருவதுடன் தன் அளப்பரிய கணித ஆற்றலால் பல பொறியாளர்களை, வைத்தியர்களை,அறிவுஜீவிகளை உருவாக்கி வரும் ஐயா அரியகுணசிங்கம் அவர்களின் ஆளுமைகளை,சேவைகளை,சாதனைகளை பாராட்டி பிரித்தானியா வட்டூர் தமிழர் ஒன்றியம் “வாழ்நாள் சாதனையாளர் “விருது வழங்கிக் கெளரவித்தது குறிப்பிடத்தக்க ஓர் நிகழ்வாகும் .
ஐயா திரு.செ.அரியகுணசிங்கம் அவர்கள் கணிதத்தில் மட்டுமல்லாது கலையிலும் ,கவிதை புனைவதிலும் சிறுகதைகள் எழுதுவதில் வல்லவராக திகழ்ந்தார்.”இதயதாகம்”, “மனக்குறை” உட்பட பல சிறுகதைகளை ஈழத்தின் பிரபல செய்தித்தாளான வீரகேசரியில் எழுதிவபெரும் வரவேற்பினைப் பெற்றார் .மரபுக் கவிதைகள் தொடக்கம் புதுக்கவிதைகள் வரை புனைவதில் வல்லவரான ஐயா அரியகுணசிங்கம் அவர்கள் பல கவிதை தொகுப்புகளை நூலாகவும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார் .2019 களில் பண்டிதமணி க.மயில்வாகனனார் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவர்பால் உள்ள அன்பினாலும் மதிப்பினாலும் ஐயா அரியகுணசிங்கம் அவர்கள் எழுதி வாசித்த கவிதை ஒளிநாடா சமூக வலைத்தளங்களில் பரவலாக வெளியாகி பாராட்டுகளை பெற்றதுடன் பண்டிதர் பால் அவர் வைத்திருந்த மதிப்பின் ,அன்பின் உச்சத்தினை வெளிப்படுத்தியது எனலாம் .
எந்த நேரத்திலும் சிரித்த முகத்துடனும் நிதானத்துடனும் சமூக பொறுப்புடனும் சமய சமூக கலாசார விழுமியங்களை பேணிப் பாதுகாத்துவரும் ஐயா அரியகுணசிங்கம் அவர்கள் தனது கல்விப் பணியினை புலத்தில் குறிப்பாக பிரித்தானிய மண்ணில் தொடர்ந்து ஆற்றிவருவது மாணவசமுதாயத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் எனலாம் . செறிவுரு சேவையின் சிகரமாகி சிறப்பான கல்வியினை பெற்று ஆசிரியப்பணியினை தேர்ந்தெடுத்து பலநூற்றுக்கணக்கான நல்லொழுக்கமுள்ள மாணவர்களை பட்டாதாரிகளாக்கி அவர்கள் வாழ்வினை வளம்பெற வைத்ததுடன் எமது மண்ணுக்கு பெருமையினையும் புகழினையும் பெற்றுத் தந்த ஆசிரியர் அரியகுணசிங்கம் அவர்களின் பணிகள் தொடர அவர் நிலமதில் நீடு வாழ்கவென வாழ்த்துவதில் எமது மண் பெருமையடைகிறது.
நன்றி.
க.ம.இரவி.