முரண்பாடுகள்

முரண்பாடுகள்

கல் தோன்றி  மண் தோன்றா காலத்து முன் தோன்றிய குடியில் வந்தவர் தானா நீ ஆனால்  இன்று நீ உன்  நிலை!  நாகரிக குப்பைகளை மனதில்   தாங்கி  தன்னலம்,  அதிகாரவெறி,  பணத்தாசை, பெண்ணாசை இவற்றின்  மொத்த விம்பமாய் உன் மனத்தின்  மாண்பு  விசித்திரமானது எப்போது…..? 

 வருவாய்க்காக வரி ஏய்ப்பு  செய்வது  தவறு என்பதை  தெரிந்தும் அது ஒரு தந்திரம் அறிவாளித்தனம் என்று கருதி தவறிழைத்து பொய் பேசி யாசித்துப் பணம்  சேர்க்கும்போது  உந்தன்  ஒழுக்கம் வாய்மை  எல்லாம்  பெட்டியில் பணத்துடன் அடக்கம் செய்யப்பட்டு விடுகிறதா…??

ஆயிரக்கணக்கில்  தமிழர் கொன்று குவிக்கப்படுகையில் எதிர்த்துக் கேட்க முனையாமல் வெறும் கொலையாளிகளிடம் கைகட்டி  நிற்கையில், எட்டி நின்று சரி பிழைசொல்லி தள்ளி நிற்கையில் உமது  வீரம்  தமிழுணர்வு  விடுமுறையில்  சென்றதா என்ன…???

பெண்டிமைத்தனம் வேண்டாம் முழங்கிய உம்குரல்  இன்று வெறும் போகப்பொருள்களாக அவர்களைப் பாவித்து , பெண்களின் கனவுகளைச் சிதைக்கையில் உன் வீராப்பு வெறும் சில நொடிகள் மட்டும் தானா அதுவும் பூவைகளிடம் மட்டும் தானா…????

எந்த அமைப்பிலும் உன் சொல்லே சட்டமாயிட வேண்டும்  இல்லையெனில் அதை முடக்கி வேறு  அமைப்புகளிலும் நுழைந்து குழப்பிச் சிதைக்கும் சகுனித்தனம்  உனைப் போலி அரசியல்வாதியாய் தத்தெடுத்துக்  கொண்டது எப்படி…….?????

பெண்ணியம்  சிதனம் பற்றி மணிக்கணக்கில் பேசிய உன் வாதங்கள்  சமுக சிந்தனைகள் பிறருக்கு மட்டுமா உனக்கென வரும்போது  மட்டும் அவை காணாமல்  போவதெப்படி…..??????

உன் கொடை அது  துன்பத்தில் துவழும் பிறருக்காக்காகவா அன்றில் உன் பெயர் முன்னிலைப் படுத்தப்படவேண்டும் அதற்காகவா….???????  

தற்பெருமைக்காக எதையும் செய்து எவரையும் வருத்தவோ அல்லது  தண்டிக்கவோ உனக்கென்ன வேறு எவர்க்கென்ன உரிமை இருக்கிறது  ????????

ஒவ்வொருவர் மனதிலும் எழும் மனச்சாட்சியை சிறிது உணரின் மட்டுமே நாம் மேதைகள் இல்லை வெறும் பேதைகள்மட்டும் தான் என்று உணர முடியும். எமைச் சீர்செய்வோம்  சமூகம் சீராகும் ! 

ஆதலின் அன்பு செய்வீர் !

உணர்வுடன்

அமலன்

Share