பாசவலை – சிறுகதை

பாசவலை
பாசவலை 
(சிறுகதை)

கீழ்வானம் வர்ண ஜாலத்தில் சூரியனை தூங்கவைக்க முயற்சித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் இலுப்பை மரங்கள் சூழ்ந்த அந்த கண்ணகை அம்மன் கோவிலடி அரவமற்றுக் கிடந்தது. சில்லென்ற காற்றில் பறக்கும் தலைமுடியைக் கைகள் சரிசெய்ய, கருவிழிகளிலிருந்து துளிர்க்கும் கண்ணீர்த்  துளிகள்  அவளின் கன்னங்களின் வழியாக பிரவகிக்க எனைப் பார்த்தாள்.

“அழுகிறாயா ”

வினாவிய எனக்கே என் குரல் கேட்கவில்லை.அவளின் தலை முடி கோதி அவளை அணைத்து ஆறுதல் சொல்லும் ஆவல் எனை உந்த முன்நகர்ந்தபோது மானெனத் தாவி என்மேல் சரிந்து தோளில் தலை சாய்த்துக் கொண்டாள். முதன்முதலான அவளின் ஸ்பரிசமும் , மெலிதாக அவளின் சுகந்தமான வாசனையும்  , அவள்  இதமான நெருக்கமும் இனம்தெரியா தவிப்பைத் தர சிலகணம் எனை மறந்து நின்றேன்.சுதாகரித்து அவள் பறக்கும் தலைமுடி கோதி,

“ எப்ப போகவேணும் திங்கட்கிழமையா..  “ என்றேன். பதிலற்று மௌனம் காத்தவளின் வதனத்தை என்னிரு கரங்களால் ஏந்தி வழியும் கண்ணீரைத் துடைத்து விட்டேன்.எப்போதும் புன்னகை ததும்ப பூத்துக்குலுங்கும் அவள் முகம் வாடியிருப்பதைக் காண மனது துடித்துப் போனது.

“ ஏய் மண்டு படிக்கத்தானே வெளிநாடு போறாய்..என்ன என்னை விட்டு ஒரேயடியாவா போறாய்.”

முடிக்குமுன் என் வாயை தன் கரங்களால் பொத்தினாள்.`

“ நான் போகேலை …எனக்கு பயமாகிடக்கு..”

அவளின் முகத்தில் நான் என்றுமே பார்த்திராத பயவுணர்வு…… கலவரம்.

” உங்கட அப்பாவும் அம்மாவும் கொழும்புமட்டும் வருகினம்தானே.. பிறகென்ன பயம் ..ம்..’”

“இப்பவே இப்புடிப்பயந்தா பிறகு டாக்டராகி எப்பிடி நோயாளிகளுக்கு ஒபெரேசன் செய்யப்போறாய்…”

அவளின் கன்னத்தைக் கிள்ளி கேட்டேன்

“ நான் ஒண்டுமாவும் வரேலை… நான் போகேலை..”

“அதுதான் ஏன் போகேலை..”

“ உங்களை விட்டுட்டுப் போகேலாது..எனக்குப்பயமாயிருக்கு.. என்னை போகாதை எண்டு சொல்லுங்கோ ப்ளீஸ்..”

ஆடிபோனேன். என் பிரிவைக்  தாங்க முடியாத அவளின் நேசம் எனைக் கிறங்க வைத்தது.

போகாதே..என்று சொல்ல  என் மனதின் எங்கோ ஒரு மூலையில்  ஒரு பொறி கிளம்பி எனை ஆக்கிரமிக்க…

என்னைச் சுதாகரிக்க என்னால் முடியவில்லை..என் மனதின் சஞ்சலத்தை அவள் உணர்ந்திருக்க வேண்டும்.என் மார்பில் சாய்ந்து எனை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.

“ என்னை போகாதை எண்டு சொல்லுங்கோ ப்ளீஸ்..”

மறுத்துப்பேச நான் என்வசம் இல்லை. அவள் அணைப்பிலிருந்து விடுபட மனமும் வரவில்லை.என் மௌனம் அவளையும் தொற்ற…சில மணித்துளிகள் எம் வசம் நாமில்லை. அசைவற்று எமை மறந்திருந்தோம்.. முதலில் சுதாகரித்த நான் மெதுவாய் கோதையின் கன்னம் வருடி..

” பிரியா…”  என்றழைத்தேன்.

“ ம் “.. என்றவளிடம்,

“ படிக்கத்தானே வெளிநாடு போறீங்க…”

“  உங்களை விட்டுட்டுப் போகேலாது…நான் இங்கயே படிக்கிறேன்…”

“ ஸ்கொலசிப்பில லண்டன் கம்பசில படிக்கிற பெரிய வாய்ப்பிது…..”

அவளிடம் ஆறுதலாய் அன்பாய்… கண்டிப்பாய் பேசிப்பார்த்தேன். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் செவிமடுக்க மறுக்கும் அவள் எனக்கு விந்தையாய்த் தெரிந்தாள்.இருள் படர்ந்தது வெளியே.எம்மிருவர் மனதிலும் தான் சோக இருள்.  மெதுவாய் என்னிடமிருந்து விலகி..

‘நான் போட்டுவாறேன்…’

என் விழிகளை ஊடறுத்து சிலகணம் பார்த்தாள். பின்பு கஸ்ரப்பட்டுப் புன்னகைத்து விட்டு துவிச்சக்கர வண்டியை உருட்டிப்போனாள். அவள் உருவம் மறையும்வரை அசைவற்றுப் பார்த்திருந்தேன். ஒரு வைத்திய நிபுணராகி அல்லற்படும் மக்களுக்கு உதவவேண்டும் என்ற இலட்சியத் துடிப்புள்ளவள்  என்னால் தடம்மாறுவது தாங்க முடியவில்லை. தைரியமாக என்னிடம் வந்து தன் பிரியத்தை சொன்ன தைரியசாலி.  இன்று கோழையாய் கண்ணீருடன் என் கண்மணியைக் காண ஆச்சரியமாய் இருந்தது.  பெண்களோடு பேசவே கூச்சப்பட்டு விலகிச் செல்லும் நான் முதலில் அவளைக் கண்டது அந்நிய இராணுவத்தடை முகாமில்.

மாலை நேரம் மகாதேவா ஆசிரியரிடம் படித்துவிட்டு நவாலிவெளி வழியாகவீடு திரும்புவது என் வழக்கம். இராணுவத்தடை முகாமில் ஒரு இளம்பெண்ணை  நிறுத்தி வைத்து வெருட்டிக் கொண்டிருந்தனர். என் அடையாள அட்டையை பார்த்துவிட்டு அவர்கள் எனை போகப் பணித்தனர்.அவளைக்  கண்டேன்.இரட்டைச்சடை போட்டு  எளிமையான உடையழகில்..  அழகான முகவழகில் எனைப்பார்த்தாள் நெஞ்சில் இனம் புரியாத பிராவகம். துவிச்சக்கரவண்டியை நிறுத்தி,

“ என்ன பிரச்சனை…”  எனை மறந்தது கேட்டேன்.

“ ஐடென்ரி கார்ட்டை மறந்திட்டேன்….”

என்று புன்னகைத்தாள். அழகிய அவள் வதனத்தில் சிறு ஆறுதல் கோடிட்டது. அவர்களுடன் பேச முற்பட்டபோது… அவளை சென்று அடையாள அட்டையை எடுத்து வந்து காட்டுமாறும் அதுவரை என்னை நிறுத்தி வைத்திருக்கப் போவதாக கண்டிப்பாய் சொன்னார்கள். நான் சிரித்துக் கொண்டு சரி என்றேன். வியப்பாய் எனை பார்த்தவள்

“ நன்றி” என்றாள்.

“ திரும்ப வருவீங்கள் தானே..”  நான் கேட்க.

“ பார்ப்போம்…. “  என்று  சிரித்தவள்,

“ கெதியா வாறன்”   என்றாள்.

“ இருட்டயிடும் வேற ஆக்கள கூட்டி வாங்கோ “  என்றேன்.

தலையசைத்துச் சென்றாள். என்னை அணுகிய இராணுவ அதிகாரி ஒருவர்,

“ மற்றவங்களுக்கு உதவும் நீ ஒரு போராளியா “   என்று அதட்டுவது போல வினவினார்.

“ இல்லை நான் ஒரு சாதாரண மனிதன் “ என்றேன்.

எனை பார்த்துப் புன்னகைத்த இராணுவ அதிகாரி

“ அந்தப்பெண் உன் நண்பியா  ” என்று கேட்டார்

”  ஓம் ”   என்றேன்.

“ நீ போ..அவளை நாளைக்கு ஐடென்ரி கார்ட்டை கொண்டுவரச் சொல்லு “ என்றார்.

நான் நன்றி சொல்லிவிட்டு துவிச்சக்கர வண்டியை வேகமாக மிதித்து அவளைக் அண்மித்து…..

“ நீங்கள் நாளைக்கு வரும் போது ஐடென்ரி கார்ட்டை கொண்டு வரசொன்னவங்கள்… நான் வாறன்…”

அவள் பதிலுக்கு காத்திராமல்  சங்கரத்தைச் சந்தியால் திரும்பி வேகமாக மிதித்து  வீட்டை அடைந்தபோதுதான் தோன்றியது .

யாரவள்…

அவளுடன் கொஞ்சம் பேசியிருக்கலாம்.மனமெல்லம் பரபரப்பு… எனோ அவள் முகம் நினைவில் அடிக்கடி வந்து போனது.

“ யாரது….”

சருகுகளின் சரசர சத்ததை மீறி ஒலித்த குரல் எனை சுயநினைவிற்கு கொணர்ந்தது.

“ என்ன செய்யுறியள் அப்பு உங்கட கூட்டாளிப்பெடியள் மச்சுக்கு போட்டு வந்திட்டாங்களே.. “

பனம்பழம் பொறுக்க வந்த மயிலப்பு கேட்டார்

“ இல்லை.. இன்னும் வரேல…”

என்று முனகிவிட்டு அவ்விடத்தை விட்டு விலகி வீடு நோக்கி நடந்தேன். மனமெல்லாம் என்னவள்…முதல் சந்திப்பிலேயே உள்ளம் கொள்ளை கொண்டவள் மறுநாள் மாலை வகுப்பு முடிந்து வெளியேவரும்போது நின்றிருந்தாள். ஆச்சரியமாய் இருந்தது.இவளும் இங்கு படிக்க வருபவளா.. நான் கண்டதில்லையே.. நான் தான் பெண்கள் பக்கமே திரும்புவதில்லையே. தாறுமாறாய் இதயதுடிப்பு எகிற.. நடந்தேன் அவளுடன் பேசலாமா.. வேண்டாமா… வேண்டாம் போய்விடுவோம். துவிச்சக்கர வண்டியை எடுத்து உருட்டி வெளியேற முற்படுகையில்…

“ நீங்கள் நவாலிவெளியாலா போறீங்கள்….”

அவள் குரல் எனைத்தடுத்து நிறுத்தியது.அவளைப் பார்த்தேன்.எளிமையான தோற்றத்தில் அசரவைக்கும் புன்னகையில்…அவள் துறுதுறு விழிகளை பார்த்துக் கேட்டேன்.

“ ஓம்…நீங்கள் இண்டைக்கும் ஐடி கொண்டுவரேலையா…”

“ ஓம்..கொண்டு வரேலை..உங்களை பணயமா விட்டுட்டு நான் தப்பலாம் அதுக்குத்தான்…”

கலகலவென்று சிரித்தாள்.

“வாங்கோ போவோம்..”

துவிச்சக்கர வண்டியில் ஏறியபோது கவனித்தேன் எத்தனை பொறாமைக் கண்கள்  அத்தனையும் பொறாமையுடன்   எனைச் சுட்டெரித்ததை. சங்கரத்தைச் சந்திவரை பேசிக்கொண்டே வந்தாள். தன் பெயர் பிரியா என்றாள். தன் குடும்பத்தைப் பற்றிச் சொன்னாள்.என்னை ஏற்கனவே தெரியும் என்று அதிரவைத்தாள். எனை மறந்த நிலையில் இருந்தேன்.பின் ஒவ்வொரு மாலைநேர வகுப்பின் பின் இருவரும் இணைந்தே வீடுதிரும்புவோம். என்ன இனிமையான நாட்கள் அவை .என்றும் புன்னகை ததும்ப பார்த்த அவள் முகம் இன்று கண்ணீருடன்.

“ என்னப்பு..”

வீடு வந்தடைந்திருந்தேன்.வாடிய மகனின் முகத்தை இனங்கண்ட என் தாயின் வினாவும்,

“அண்ணா டேய் என்ன உன்ர ஆளை காணேலயோ.சோகமா வாறாய் “ என்ற தங்கையின் கிண்டலும்

‘” யாரடி அவன்ர ஆள்… “

அப்பாவின் செல்லக் கண்டிப்பும் எனைப் பாதிக்கவில்லை.

அன்றிரவு  தூங்கம் கூட வரமறுத்து அடம்பிடித்தது என்னவளைப்போல. அதிகாலைப்பொழுதில் தூங்கிப்போனேன்.முகத்தில் விழும் குளிர்ந்த நீர்த்துளிகள் எனை எழுப்ப தெளித்துவிட்டு ஒடி ஒளித்த என் தங்கயை செல்லமாக கோபித்த அம்மா வியப்புடன் எனைப்பார்த்து

“ என்னப்பு சுகமில்லயா… இவ்வளவு பிந்தி எழும்பிறாய்..”

கனிவுடன் கேட்டார்.

“ ஒண்டுமில்லையம்மா..”

காலைக்கடன் முடித்து முற்றத்தில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்துபோனேன். எப்படி என்னவளுக்கு உணர்த்துவது.. என் மேலுள்ள பிரியத்தால் தன் இலட்சியங்களையே துறக்கத்துணியும் என் பிரியமானவளுக்கு எப்படி உணர்த்துவது. ஒரு முடிவுக்கு வந்தேன்.அன்று முழுதும் வீட்டை விட்டு வெளியே போகவில்லை.மறுநாளும்… அடுத்த நாளும் கூட… அம்மாவின் ,தங்கையின்  வினாக்களும்  நண்பர்களின் அழைப்பையும் தவிப்புடன்  தவிர்த்து அறையில் அடைந்து கொண்டேன்.நான்காம் நாள் தங்கை ஓடி வந்தாள்.

“ அண்ணா… பிரியா… பாக்க வந்திருக்கிறா வா..அண்ணா.. வா….”

சில்மிசமாய் கண்ணடித்து என்னை இழுத்துசென்றாள்.

“ யாரடி அது..”

குறும்பாய் எனைபார்த்து சிரிக்கும் அம்மாவைத் தாண்டி  முன்வாசல் கதவடி சென்று பார்த்தேன்.முற்றத்தில் எனக்குப் பிடித்த மல்லிகையின் கீழ் இரட்டைசடை போட்டு நெற்றியில் ஒற்றை திருநீற்றுக் குறியிட்டு மஞ்சளாடையில் தேவதையாய் தெரிந்தாள். கொஞ்சம் தயக்கம்..தவிப்புடன் அலைபாயும் அவள் விழிகள். பார்த்திருந்தேன்

” போ அண்ணா போய்க்கதை..”  தங்கை எனைத் தள்ளினாள். மனதைக்கல்லாக்கி..

” பார்க்கவிருப்பமில்லை எண்டு சொன்னனான் எண்டு சொல்லு…”

“ ஏன் அண்ணா சண்டையே…பாவம்.. அவாவை… உள்ள கூப்பிடண்ணா… ”

“ ஏய்…”     தங்கையை உறுக்கினேன்.

“சொன்னதைப்போய் சொல்லு… போ..”

கடுமையாய் ஒலித்தது என் குரல்.வீட்டின் பின்வாசல் வழியாய் வெளியே வந்து ஒளித்திருந்து பார்த்தேன்.என் தங்கை என்னவளிடம்உள்ளே காட்டி  சொல்ல அவள் வதனம் வாடிப்போனது .விழிகளில் நீர் திரண்டு தடுமாறியவள் தலையசைத்து பரிதாபமாய் சென்றாள்.நான் செய்வது கொடுமை…என்னவளின் அன்புமனதை என்னால் எப்படி நோகடிக்க முடிகிறது. மனது வலித்தது .அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டேன். என்னவளை கண்டு காதலுற்ற நாட்களின் ஞாபகங்கள் மனக்காயத்திற்கு மருந்தாக…எனக்காக அவளும் அவளுக்காக நானும் காத்திருந்து சந்தித்த ஞபகங்களை மனத்திரையின் மீட்டி..மீட்டி…பெருமூச்சிறைத்திருந்தேன்.

அன்றொரு நாள் மருதடிகோயில் தேர். நான் போயிருந்தேன்.என்னவளும் வந்திருந்தாள்.என்னிடம் வந்து சிறிது தயங்கி நின்றாள்.அவள் நண்பி குறும்பாய் சிரித்து விலகிவிட,

“ என்ன…வெக்கப்படுறீங்கள் என்ன…”  என்றேன்.

என்னருகில் வந்தாள்.என் கரங்களைப் பற்றி…தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

“ நான் உங்களை நேசிக்கிறேன்..நான் உங்களோட  வாழணும்…அதோட ஒரு டொக்டராகி  எங்கட மக்களுக்கு சேவை செய்ய வேணும். என்னை நேசிப்பீங்களா…”

கண்களைத் திறந்து எனைப்பார்த்தாள். என் விழிவழி நுழைந்து உயிரில் கலந்தே விட்டாள்.

“ சரி.நான் ரெடி ..எப்போ என்ர மனிசியா போறீங்க…” என்றேன் வழக்கம் போல் எனை மறந்து.

சிரித்தோடிய என்னவளை பார்த்து நின்ற அந்த நிமிடங்கள் என் மரணப்படுக்கையிலும் மறக்காது . தூக்கமற்ற  இரவின் நீட்சி…பிரியமான துயரில் என் மனசாட்சி. விடிந்தது பொழுது….எனக்கல்ல… அன்றில் என்னவளுக்குமல்ல… என்னவளின் நண்பி வந்தாள். என்னவள் எனைப் பார்க்கத்துடிப்பதாக  துயரமாய் சொன்னாள்.மறுத்தேன்.அவள் லண்டன் செல்லாவிடின் காதலே இல்லை என்று சொல்ல சொன்னேன் .அரக்கனாய் கத்தினேன்.அவள் வைத்தியராவாள் என்பதால்தான் காதலித்தேன் என்று பொய் சொன்னேன். மிரண்டு போன அவள் தோழி வெறுப்பை உமிழ்ந்துவிட்டுச் சென்றாள். என்னை நேசிக்கும் என் இனியவளின் மனதை வதைக்கும் துணிவு எனக்கெப்படி வந்தது. அவள் இதை தாங்குவாளா. சிந்தனை வசப்பட்டவனாய் தெருவில் இறங்கி நடந்து கொண்டிருந்தேன். போகும் வழி தெரியா குழந்தையாய்…. இடம் அறிந்தும் வழி தெரியா குருடனாய். நண்பன் பரணன் இடைமறித்தான்.

“டேய்..என்னடாப்பா..யோசிச்சுக்கொண்டு போறாய்..”  என்றான்.

“ இல்லை சும்மா  வாசிகசாலைக்குப்போறேன்.”

“ ஏன் உன்ர ரெஸ்ற் ரிசல்ற் இப்பிடி போட்டுது.அடுத்தமுறை அவங்களுக்குப் பின்னால திரியாமை படி.நான் நாளைக்கு கொழும்புக்குப் போறேன். பிரதேனியா கம்பஸ் போறேன். நீயும் என்னோட கம்பஸுக்கு வரவேண்டிய ஆள்… இப்ப…”

கவலையுடன் சொன்னவன் ,

” நீ வாறியா ஒருக்கா யாழ்ப்பாணத்திலை  என்னை பஸ்  ஏத்த..”

வேண்டிக்கொண்டான்.

‘எப்ப…’

“ நாளைக்கு காலமை அஞ்சு மணிக்கு….”

“சரி வீட்டடிக்கு வாறன்எ ன்னடாப்பா…”

“கொஞ்சம் யோசியடா..அப்பா கவலைப்படுறார்.திரும்ப டெஸ்ற் எடு”

அறிவுரைக்கும் நண்பனை புன்னகையால் தவிர்த்து நடந்தேன். வாசிகசாலையோ, வலைப்பந்தாட்டமோ என்னை ஆற்றவில்லை.வீடு திரும்பினேன். அப்பா என் அறைக்கு வந்தார்.

“என்ன..எதாவது பிரச்சனயே…நீங்கள் ஏன் ஒருக்கா திருப்பி சோதனை எடுத்துப்பார்க்க கூடாது.. ஒழுங்காக படிக்காம ட்ரைனிங் அது இது எண்டு.. இந்த ரிசல்ற் வந்ததே பெரிய விஷயம். இல்லாட்டி ரெக்னிகல் கொலேஷுக்கு அப்பிளை பண்ணுங்கோ.நீங்களே முடிவு செய்யுங்கோ.”

விண்ணப்ப படிவத்தை நீட்டினார். வாங்கி தலையசைத்து,

‘சரி…’ என்றேன்.அறையில் அடைந்தேன்.

மற்றுமொரு தூக்கமற்ற இரவு நத்தையாய் நகர… கடிகார மணி ஒலிக்கு முன்னெழுந்து.. நண்பன் வீடடைந்ததேன். பேரூந்தேறினோம். யாழ் நகரடைந்து  சொகுசு வண்டி தரிப்பிடம் நோக்கி நடந்தோம். பரணன் பேசிக் கொண்டே வந்தான்.எதுவும் கேட்கவுமில்லை மனதில் பதியவுமில்லை. தரிப்பிடம் வந்தடைந்தபோது ஓர் இன்ப அதிர்ச்சி.வ்ண்டியின் முன்வரிசை யன்னலோர இருக்கையில் பிரியா அமர்ந்திருந்தாள். ஓடிப்போய் கை பற்றி பேச துடிதுடித்து முன்னோக்கி போனேன். ஆனால் என்னைக் கண்டால் குழந்தைபோல் அடம்பிடித்து நிச்சயம் போக மறுப்பாள். பாசவலைக்குள் அவளை சிக்கவைத்து இன்னும் எவ்வளவு தரம் என் இனியவளைச் சித்திரவதை செய்யப் போகிறேன்.என் அன்பும் பாசமும் அவள் இலட்சியத்தை சிதைப்பதை அனுமதிக்க முடியாது என்னை அடக்கி என்னவளின் பார்வை படாத இடத்தடி சென்று ஒளிந்து கொண்டேன்.பரணன் நிறைய அறிவுரை தந்தான். புன்னகையுடன் நான் என்னவளைப் பார்த்திருந்தேன். பரணன் ஏறி அமர வாகனம் புறப்பட்டது. இப்பொழுது நண்பனுக்கு பிரியாவிடையும் , என்னவளுக்குத் தெரியாவிடையும் தந்து சில கணங்கள் நின்றேன்.பின்னர் திரும்பி யாழ் பேரூந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

“ கொஞ்சம் நில்லுங்கோ….”

பெண்குரல் கேட்டு திரும்பி பார்த்தேன்.அது பிரியாவின் நண்பி பவானி. புன்னகையுடன் கேட்டாள்.

“ என்ன..உங்கட ஆளை ரகசியமா வழியனுப்ப வந்தனீங்களா..?”

“ இல்லை என்ர நண்பனுக்காக வந்தனான்..”

“ ஓ..நீங்கள் சொன்னதெல்லாம் பிரியாட்ட சொன்னனான். அவள்அதெல்லாம் நம்பேல எண்டு சொன்னவள். நீங்கள் தன்னை பார்க்கமாட்டேன் எண்டு சொல்லுற அளவுக்கு உங்களை தான் நிறைய கஷ்டப்படுத்திப் போட்டாள் எண்டு கண்கலங்கினவள்…”

பவானி தொடர்ந்தாள்.

“ இனி தான் ஒரு டொக்டராகினப் பிறகுதான் உங்களை வந்து பார்ப்பாளாம்.அதுவரை ஒரு தவம் போல படிக்கப்போறாளாம். இந்தாங்கோ அவளின்ர கடிதம் நான் வாறன்…”

கடிதத்தை என்னிடம் தந்துவிட்டு பவானி சென்றுவிட்டாள்.பதைபதைக்கும் நெஞ்சுடன் கடிதத்தைப் பிரித்தேன்.

என்னவருக்கு என்று தொடங்கியவள் உங்களின்  இனிய குணம் கண்டு பிரியமுற்றேன்.சாதியோ அன்றில் சதியோ எங்களைப் பிரிக்கமுடியாது என்று இறுமாந்திருந்தேன். ஒரு பெண்ணாக மட்டும் எனைப் பார்க்காமல் என் இலட்சியங்களைக் கூட நேசிக்கும்  உங்களை நேசிப்பது எனக்குப்பெரும்பேறு.நான்கு வருடங்கள் உங்களை விட்டு உடலளவில் பிரிகிறேன். இந்தப் பிரிவில் கடிதம் எழுத மாட்டேன். உங்களுடன் தொலைபேசியில் பேச மாட்டேன்.நீங்கள் என்னுடன் பேசினாலோ அன்றில் உங்கள் கடிதம் கண்டாலோ எல்லாவற்றையும் துறந்து உங்களிடம் ஓடி வந்து விடுவேன்..என் உயிருக்கும் மேலாய் உங்களை நேசிக்கும் உங்கள் பிரியா..என்று முடித்திருந்தாள். என்னவளின் பிரிவு  சுமந்த என் மனதின் வலி..நெஞ்சு முழுதும் பிரவகிக்க.. கால்கள் தள்ளாடி நிலத்தில் சரிந்தேன்……!

ஆம் நான் நிகேஷ் ,நான் ஒன்றும் இறந்து விட மாட்டேன். சின்ன மயக்கம் தான்.. எனக்கு இன்னும் நிறைய கடமைகள் உண்டு.. பரீட்சை எழுதி வெல்லவேண்டும். என் தாயக கடமைகளுமுண்டு.நான்கு வருடங்கள் என்னை வருத்தி உழைக்கவேண்டும்.என் தேவதை நலமுடன் திரும்பிவர கண்ணீர் மல்க தினம் தினம் இறைவனைத் தொழுது  நிற்கவேண்டும். .

நீங்களும் எமக்காக பிரார்த்திப்பீர்களா…….!

(முற்றும்)

அமலன் (1991)

Share