எனது கிராமமும் அரசியலும்.

எனது கிராமமும் அரசியலும்.
என்ன?
நிகழ்காலதிற்கு ஒத்துவராத வரட்டுச் சித்தாந்தங்களுடனும் அறிவுரைகளுடனும் வந்துவிட்டான் என்று நீங்கள் நினைத்தால் அதுவல்ல உண்மை. என்னுள் எழும் சமகால நிகழ்வுகளின் தாக்கம் அல்லது ஏக்கம் அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
முதலில் அரசியல் எவ்வாறு எம் பிரதேசங்களில் தாக்கம் செலுத்துகிறது என்று பார்ப்போம். பெரும்பான்மைக் கட்சிகளும் இனவிடுதலைப்போரின் பின் மீந்திருக்கும் “நாணல்கள்” எனும் சிறுபான்மைக் கட்சிகளும்,தமது சித்தாந்தங்களை ஒவ்வொரு இனக்குழு மீதும் திணிக்க முயல்வர்.அந்தந்த இனக்குழுக்களின் சனத்தொகையின் அளவுக்கு ஏற்ப உதவித்திட்டத்தின் அளவு அல்லது புறக்கணிப்பு இரகசியமாகத் திட்டமிடப்படும்…. செயற்படுத்தப்படும்.அந்தந்த இனக்குழுக்களின் தலையாரிகள் எந்தக்கட்சிக்கு ஆதரவளிக்கிறார்களோ அவ்வினக்குழுவைச் சார்ந்தவர்கள் அந்தக்கட்சிக்கு வாக்களிக்க பணிக்கப்படுவர்.இதற்காக. தலையாரிகளுடன் பேரம் பேசுதலில் கட்சிகள் ஈடுபடும். பெரும்பான்மையாக வேலைவாய்ப்பு , வீதிதிருத்துதல், மின்சாரஇணைப்பு போன்ற அரசாங்கம் தன் மக்களுக்கு செய்யவேண்டியன எல்லாம் பேரம்பேசிச் செய்யப்படும். ஜனநாயகமென்று கூறிக்கொண்டு முடியாட்சி முறையையும் பண்டமாற்று ஒப்ப சேவைகளை வியாபாரமாகவும் பாமரமக்களின் விருப்பு வெறுப்புகளைப் புறந்தள்ளி அவர்களை மந்தைகளாக்கி அவர்களுக்குள் பிரச்சனைகளை உருவாக்கி புதிது புதிதாய் அவர்களுக்கு மேய்ப்பர்களாக தலையாரிகளை உருவாக்கி பதவி எனும் மோகத்துடன் கட்சிகள் நடத்தும் கபட கபடியாட்டம்தான் அரசியல் என்கிறேன் நான்.
மக்களுக்காக பாராளுமன்றத்தில் உரத்துக்குரல் கொடுப்பவர்கள் தமக்கு சொத்துகளைக் குவிப்பதிலும், தமது இனக்குழுவின் வாழ்வாதார பெருக்கத்திலும் செய்யும் கவனத்தில் அற்ப அளவைக்கூட பிற இனக்குழுக்களின் அபிவிருத்திக்கு பணியாற்ற முன்வருவதில்லை. தேசிய ரீதியில் இணக்க அரசியல் செய்யமுயன்று தனிப்பட்ட நலன்களுக்காக சரணாகதி அரசியலாக சோரம்போன வேடிக்கைகள் நிறைய உண்டு. ஆக அரசியல்வாதிகள் அனைவரும் தூக்கியெறியப்பட வேண்டியவர்கள் என்று சொல்கிறாயா என்று நீங்கள் கிலாகிப்பது புரிகிறது. இருக்கலாம் .
தன்னை நம்பாமல் அவர் செய்வார் இவர் செய்வார் என்று மற்றவரை நம்பி நம்பியே துயர்ப்பட்டது போதாதா ? உயிர்கள், உடைமைகள், உரிமைகள் அழித்தொழிக்கப்பட்டது போதாதா…?
இன்னும் நாம் விழித்தெழாவிடின் எம் இருப்பே கேள்விக்குறியாகிவிடும்.
என்னதான் செய்யலாம் என்கிறீர்களா…?
மாற்றத்தை எவ்வாறு கொணரலாம் என்கிறீர்களா…?
அது ஒன்றும் கம்பசூத்திரம் இல்லை.
எமது கிராம அபிவிருத்திக்கு எல்லாரும் ஒன்றிணைவோம். எந்தப் பிரச்சனையும், எந்த“பெயர்” சித்தாந்தமும் வேண்டாம்.
ஒரு பொதுப்பெயர் கொண்ட அமைப்பின் கீழ் ஒன்றிணைவோம்.
அது அனைவரையும் அழைத்து பொதுக்கூட்டம் நடத்தட்டும் அதிகாரம் உள்ள தனிநபராகவோ அல்லது தலையாரியாகவோ எவரையும் நியமிக்க வேண்டாம். ஒரு குழுவாக முடிவுகளை செய்வோம்.
எமக்குள் வாதிடுவோம்,
தனிப்பட்ட வரட்டுச் சித்தாந்தக்களுக்காக அல்லாமல் எமது கிராமத்துக்காக அதன் வளர்ச்சிக்காக.
நாம் உறுதியாக இணைந்து செயற்படுவோம்.
தேர்தல் வருகிறதல்லவா கட்சிகளுக்கு மட்டும்தான் பேரம் பேசத் தெரியுமா ?
எமக்குத் தெரியாதா ?
எல்லாக் கட்சிகளும் வரட்டும். அபிவிருத்திக்கு அவர்கள் போட்டிபோட்டுக் உதவட்டும்.எமதினிய கிராமம் புதுப்பொலிவு பெறட்டும்.
அப்போது நாம் அனைவரும்தான் தலையாரிகள்.
இப்போது
நான் தயார்
இணைக்கிறோம் ஆதலால்
நாம் தயார்
நீங்கள் தயாரா….?
அப்படியானால்
எப்போது கூட்டம்….?
காத்திருக்கிறோம் !
நன்றி
அன்புடன் அமலன்
Share