இனிய பொங்கல் வாழ்த்துகள்- தைப்பொங்கல்

தைப்பொங்கல்
தைப்பொங்கல்
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை
இவ்வாறு சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல் விழாவை குறிப்பிடுவதாக சிலர்
வாதிக்கிறார்கள்.
புறநானூற்றில் ”தை மாத குளிர்நீரும் குறையாத சோறும்”
என்ற பாடலில் தண்கயம் என்றால் குளிர்ந்த குளம் என்று பொருள்.
தை நீராட்டம் என்ற ஒரு நீராடு விழா பல சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது.
புறநானூற்றுப் பாடல் வருமாறு.

பாடல்:குளிர்நீரும் குறையாத சோறும்  
பாடியவர்:  கோவூர் கிழார்: (கோவூர் அழகியார் எனவும் பாடம்).  
பாடப்பட்டோன்:  சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை :  பாடாண்.
துறை: பாணாற்றுப்படை.

தேஎம் தீந்தொடைச்  சீறியாழ்ப் பாண!
கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன
நுண்கோல்  தகைத்த தெண்கண் மாக்கிணை
இனிய காண்க;  இவண் தணிக எனக் கூறி; 
வினவல் ஆனா முதுவாய் இரவல! 
தைத் திங்கள்  தண்கயம் போலக்,  
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர், 
அடுதீ அல்லது சுடுதீ அறியாது; 
இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்,

அடுத்து சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவின் துவக்கத்தில், காவல்பூதத்திற்கு, புழுக்கலும்,
நோடையும், விழுக்குடை மடையும், பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து வழிபட்டதாக குறிப்பிடப்படுகிறது.இதில் புழுக்கல் என்பதுதான் பொங்கல் என்பர் சிலர்.
நெடுநல்வாடையில் ஒரு சங்க இலக்கியப் பாடல். அதில் வரும் ஒரு தொடர்
‘பொங்கல் வெண்மழை’. அதற்குப் பொருள் ‘வெண்மேகங்கள்’.
மழைக் காலக் கருமேகங்கள் பயணித்துக் கழிந்த பாதையிலேயே வான் நிறைத்துப்
பொங்கும் நுரையாக, இவற்றை மார்கழியில் பார்க்கலாம்.
சைவ நாயன்மார்களில் ஒருவரான சம்பந்தர், தன் மயிலாப்பூர் பதிகத்தில்,
நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்‘ எனச் சுட்டுகிறார்.
திருப்பாவை, அதை சற்றே வேறுபடுத்தி,
பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவார‘ என்கிறது.
ஆக, சங்ககாலத்திலும், பக்தி இயக்க காலத்திலும், புழுக்கல் என்பது தான், பொங்கலாக
கருதப்பட்டு வந்திருக்கிறது என்கிறார்கள் சிலர்.
சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு ‘புதியீடு’ என்று பெயர் இருந்தது.
அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள்.
புதியீடு விழா’என்று ஒரு கல்வெட்டு குறிக்கிறது.அது தைப்பொங்கலாகத்தான் இருக்கவேண்டும் என்று அடித்துச் சொல்கிறார்கள் தமிழ் ஆய்வாளர்கள்.
உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த தானியத்தை (நெல்லை) மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து ‘அறுவடையில் ஒரு பங்கை’ அரசனுக்கு / கோயிலுக்குக் கொடுக்கும் விழாவாக இருந்திருக்கலாம்.
புதியீடு’ என்பது, புதுஇடு என்று பிரிபடும். புதிய (அறுவடையில்) ஒரு பங்கு என்று பொருள் கொள்ள முடியும். அறுவடைக்கு காரணமான இயற்கைக்கும், அதற்காகப்பயன் பட்ட உழவு மாடுகள், வீட்டில் உள்ள பால் தரும் பசுக்கள் மற்றும் கலப்பை போன்ற கருவிகள் அனைத்தையும் வணங்கும் திருநாள் தைப்பொங்கல் என்பதானது.உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நிகழ்வே பொங்கல் எனப்பட்டது.
மன்னர்களுக்கு செல்லப்பிள்ளைகளான மேற்குடி என வரையறுக்கப்பட்ட நிலச்சொந்தக்கார உழவரால் பொங்கல் விழாவாக சங்ககாலம் தொட்டு கொண்டாடப்பட்டுவரும் விழாவை தொழில் அடிப்படையில் பிற சாதிகளாக வேறுபடுத்தப்பட்டு தாழ்த்தப்பட்ட உழவரல்லா மக்கள்மேல் கொண்டாடுமாறு சுமத்தப்பட்ட மேலாதிக்கமே பொங்கல் விழா என்பவருமுண்டு.

முற்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை (உழவரானாலும் இல்லாவிடினும்) பொங்கலை பொங்கும் அனுமதி மறுக்கப்பட்டு பொங்கலை உண்ண(தானமாகப் பெற) மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது ; அப்படியாயின் பொங்கல் எப்படி தமிழர் விழாவாகும் ?  அது மேட்டுக்குடியின் விழா என்போரும் உண்டு!.
எது எப்படியிருப்பினும் இந்த நவீன உலகத்தில் அழிந்துவரும் இயற்கையான உழவுத்தொழிலின் மகத்துவம்பேண அதன் ஆதிக்க வரலாறை அதன் மேலாண்மையை உடைத்து ஒவ்வொருவரும் அவர் உழவரல்லாவிடினும் தானும் உழவனாய்… தமிழனாய்…. 
ஒரு பொங்கல் பானையில் ஒரு சமுதாயப் புரட்சியே பொங்கல் என்பேன் நான்.
இனிய பொங்கல் வாழ்த்துகள்.
(எடுத்தாளப்பட்ட சில விடயங்கள் இணையத்தளங்களில் காணப்பட்ட தகவல்களின் தொகுப்பு.)

Share