சங்ககாலத்தில் தமிழ் மொழிக்கு வழக்கிலிருந்த எழுத்துக்கள் இவையே ஆகும். இவை பலவாறாகப் பெயரிட்டு அழைக்கப் பெறுகின்றன.

சங்ககாலத் தமிழ் எழுத்துக்கு வழங்கப் பெற்ற பிற பெயர்கள்:
இவ்வெழுத்துக்கள் தமிழி, தமிழ் பிராமி, பழந்தமிழ் என்று பலவாறாக அழைக்கப் பெறுகின்றன. அவற்றுக்கான காரணம் பின்வருமாறு: வட இந்திய பிராமி எழுத்துக்களுக்கும் சங்ககாலத் தமிழகத்தில் வழக்கத்திலிருந்த எழுத்துக்களுக்கும் உருவ அளவில் ஒற்றுமை இருப்பினும் பல வேறுபாடுகள் உள்ளன. “தமிழி” யில் வர்க்க எழுத்துக்கள் இல்லை. கூட்டெழுத்து முறைகளும் உரசொலி எழுத்துக்களும் இல்லை. அதுபோல் தமிழ் எழுத்துக்களில் உள்ள ழ, ள, ற, ன வடிவங்கள் வட இந்திய பிராமியில் இல்லை. இந்தியாவில் பிற பகுதிகளில் கிடைக்கும் பிராமி எழுத்துகள் பிராகிருத மொழியில் (புத்த தர்மத்தை போதிப்பனவாக) இருக்கும் பொழுது தமிழ் நாட்டில் தமிழ் மொழி மட்டுமே பயன்படுத்தப் பெற்றுள்ளது. எனவே தமிழகத்தில் கிடைக்கும் பிராமி எழுத்துக்களை வட இந்திய பிராமியிலிருந்து வேறுபடுத்தி உணர்த்தும் பொருட்டு இவை தமிழ் பிராமி அல்லது தமிழி என்று அழைக்கப்படுகிறது. இதை நாம் சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள் என்றே அழைக்கலாம். அந்த எழுத்துக்களே இங்கு காட்டப்பட்டுள்ளன.
பெயர்க்காரணம்:
இந்தியா முழுவதும் கிடைக்கும் பிராமி கல்வெட்டுக்களில் பெரும்பாலும் பிராகிருத மொழி இடம்பெறுகிறது. ஆனால் தமிழகத்தில் கிடைக்கும் கல்வெட்டுக்களில் தமிழ் மொழி மட்டுமே இடம்பெறுகிறது. சில பிராகிருத வரிவடிவங்கள் (ஸ, த4) மற்றும் ஒரு சில பிராகிருத சொற்கள் (த4 ம்மம் ஸாலகன்) மிகவும் அரிதாகவே கிடைக்கின்றன. எனவே எழுத்து ஒற்றுமையிருப்பினும் மொழி மற்றும் சில சிறப்புத் தன்மைகள் காரணமாக சங்க காலத்தில் கிடைக்கும் பழந்தமிழ் எழுத்துக்களை இப்பொழுது இருக்கும் தமிழ் எழுத்திலிருந்தும் அசோக பிராமி எழுத்திலிருந்தும் வேறுபடுத்துமுகமாக வழங்கப்பெற்ற பெயரே “தமிழி” அல்லது “தமிழ் பிராமி” என்பதாகும். தமிழகத்தில் கிடைக்கும் பிராமி எழுத்திற்கு “தமிழ் பிராமி” என்று பெயரிட்டவர் ஐராவதம் மகாதேவனாவார். அதுபோல் “தமிழி” என்று பெயரிட்டவர் நாகசாமியாவார். இதனை “தொன்மைத் தமிழ் எழுத்துக்கள்” என நடன காசிநாதன் மற்றும் சு.இராசவேல் போன்றோர் குறிப்பிடுகின்றனர்.
சமண சமயத்தின் ரிஷபதேவருக்கு (முதல் தீர்த்தங்காரர்) இரு மகள்கள் என்றும் அவற்றுள் ஒருத்தி பெயர் “சுந்தரி” என்றும், இன்னொரு மகளின் பெயர் “பிராம்மி” என்றும் கூறி, சுந்தரி என்பது மொழியையும், பிராமி என்பது எழுத்தையும் குறிப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. இக்கருத்து பாகவதம் 5இல் விளக்கப்பட்டுள்ளதாகவும் கணேசன் கூறுகின்றார்.
இவ்வெழுத்துக்களின் தன்மை (Nature of Inscriptions)

- பழந்தமிழ் எழுத்துகள் சமணர்கள் வாழ்ந்த குகைகளிலேயே பெரும்பாலும் காணக்கிடைகின்றன.
- பொ.ஆ.மு.-பொது ஆண்டிற்கு முன் (கி.மு.விற்கு பதிலாக பொ.ஆ.மு -பொது ஆண்டிற்கு முன் என்பது வழங்கப்படுகிறது.)
- பொ.ஆ.மு.-பொது ஆண்டு (கி.பி.க்கு பதிலாகவும் பயன்படுத்தப்படுகிறது).
- சமண குகைகளில் காணப்பட்டாலும் சமண சமயத்தைப் பற்றியோ அதன் கொள்கைகள் பற்றியோ குறிப்பிடவில்லை.
- இவர்களுக்கு அமைத்துக் கொடுத்த இருக்கையும் அதனை அமைத்துக் கொடுத்தவர் பெயர் மற்றும் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற விவரங்கள் குறித்தே கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
- அனைத்தும் தமிழ் மொழியிலேயே உள்ளன. ஸ, த3 போன்ற ஒரு சில பிராகிருத சொற்கள் இடம் பெறுகின்றன.
- பாறைகளில் மட்டுமின்றி நடுகற்கள், மட்பாண்டங்கள், காசுகள், முத்திரைகள், மோதிரங்கள் இவற்றிலும் இவ்வெழுத்துக்கள் பொறிக்கப்பெற்றுள்ளன.பாறைகளில் மட்டுமின்றி நடுகற்கள், மட்பாண்டங்கள், காசுகள், முத்திரைகள், மோதிரங்கள் இவற்றிலும் இவ்வெழுத்துக்கள் பொறிக்கப்பெற்றுள்ளன.
- புலிமான் கோம்பை, தாதப்பட்டி, திண்டுக்கல், (தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், பொற்பனைக்கோட்டை (புதுவை)) ஆகிய மூன்று இடங்களில் கிடைத்த 5 கல்வெட்டுகள் மட்டுமே நடுகற்களாகவுள்ளன. இவையே இதுவரை கிடைத்த தமிழி கல்வெட்டுகளுள் காலத்தால் முற்பட்டதாக உள்ளன.
பொ.ஆ. 6ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழி எழுத்திலிருந்து தமிழ், வட்டெழுத்து என்னும் இரு வகை எழுத்துக்கள் தோன்றின. இவ்விரு எழுத்துக்களும் சில இடங்களில் ஒரே கல்வெட்டில் கலந்தும் காணப்படுகின்றன. தமிழ் எழுத்தின் வடிவத்தைத் தெளிவாக முதன் முதலில் பல்லவ மன்னன் சிம்மவர்மனுடைய பள்ளன் கோயில் செப்பேட்டில்தான் காணமுடிகிறது. இருப்பினும் இவற்றின் எழுத்தமைதி காலத்தால் பிற்பட்டதாக உள்ளது. கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. எனவே செங்கல்பட்டு மாவட்ட வல்லத்தில் உள்ள கல்வெட்டுத்தான் எழுத்தமைதியில் காலத்தால் முற்பட்ட தமிழ் கல்வெட்டாகக் கருதப்படுகிறது.
பல்லவர் காலம் :
முற்காலப் பல்லவரின் செப்பேடுகள் தெலுங்கு, கிரந்தம், கன்னடம் ஆகிய மூவகை வடிவில் எழுதப்பட்டன. சிம்ம விஷ்ணுவின் பள்ளன்கோயில் செப்பேடுகள் கிரந்த எழுத்திலும் தமிழ் எழுத்திலும் அமைந்துள்ளது. மகேந்திரவர்மனின் வல்லம் கல்வெட்டு முழுவதும் தமிழில் அமைந்துள்ளது. முதல் நரசிம்மவர்மனின் திருக்கழுக்குன்றக் கல்வெட்டில் சில வட்டெழுத்துக்கள் கலந்துள்ளன. பிற்காலப் பல்லவர் செப்பேடுகள் கிரந்தத்திலும், தமிழிலும் அமைந்துள்ளன. அவர்களின் கல்வெட்டுக்கள் தமிழ், கிரந்தம், நாகரம் ஆகிய 3 வடிவங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. பல்லவர் கால நடுகற்கள் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
கி.பி. 743ஐச் சேர்ந்த இரண்டாம் நந்திவர்மனின் மேல்சாணர்குப்பத்தில் கிடைத்த நடுகல் கல்வெட்டே தமிழில் கிடைத்த நடுகல் கல்வெட்டுக்களுள் காலத்தால் முந்தையதாகும்.
சோழர் காலம் :
முற்காலச் சோழரின் தமிழ் எழுத்துக்கள் பெரிதாகவும் அழகாகவும் உள்ளன. கவனத்துடன் எழுதப்பட்டதால் பிழைகள் குறைவாக உள்ளன. முதலாம் இராசராசன் கால எழுத்துக்கள் ஒப்பற்ற வனப்பு உடையன. பிற்காலச் சோழரின் எழுத்துக்களில் அழகும் அமைதியும் இல்லை. 13 ஆம் நூற்றாண்டு முதல் தமிழ் எழுத்துக்களின் அழகு குறையத்தொடங்கியது.
பாண்டியர் காலம் :
கி.பி. 7,8,9 ஆம் நூற்றாண்டுகளில் கல்வெட்டுக்களில் தமிழ் கிரந்தமும், செப்பேடுகளில் கிரந்தம், வட்டெழுத்தும் பயன்படுத்தப்பட்டது. கி.பி. 12ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்தின் பயன்பாடு சிறிது சிறிதாக குறையத்தொடங்கியது. தமிழ் எழுத்தின் ஆதிக்கம் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தது.
விஜயநகர நாயக்கர் காலம் :
கி.பி. 14, 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் எழுத்தோடு கிரந்த எழுத்தும் கலந்து கல்வெட்டுகளும் செப்பேடுகளும் எழுதப்பட்டன. தமிழின் தனித்தன்மை மங்கத்தொடங்கியது. இவர்கள் தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். அத்தோடு சமஸ்கிருத ஈடுபாடுடையவர்கள். சமஸ்கிருதமும், தமிழும் கலந்து எழுதும் மணிபிரவாள நடை “விஜய நகர காலக்கல்வெட்டுக்களில் இடம்பெற்றது”. நாயக்கர்களும், விஜய நகர அரசையே பின்பற்றினர்.


முனைவர் மா.பவானி
உதவிப் பேராசிரியர்
கல்வெட்டியல் துறை
https://www.tamilvu.org/ta/tdb-titles-cont-inscription-html-kharoshthi-280366