இறுதிக் கிரியைகள்.

இறுதிக் கிரியைகள்

     திருப்பொற்சுண்ணம்
(திருப்பொற்சுண்ணம் இடிக்கும்போது பாடப்படும் பாடல்கள்)  

    திருச்சிற்றம்பலம்
முத்துநல் தாமம்பூ மாலைதூக்கி
 முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின்
சத்தியுஞ் சோமியும் பார்மகளும்
 நாமக ளோடுபல் லாண்டிசைமின்
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
 கங்கையும் வந்து கவரிகொண்மின்
அத்தன்ஐ யாறன்அம் மானைப்பாடி
 ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 1 


பூவியல் வார்சடை எம்பிராற்குப்
 பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும்
மாவின் வடுவகி ரன்னகண்ணீர்
 வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள்
கூவுமின் தொண்டர் புறநிலாமே
 குனிமின் தொழுமின்எங் கோன்எங்கூத்தன்
தேவியுந் தானும்வந் தெம்மையாளச்
 செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே. 2 


சுந்தர நீறணிந் தும்மெழுகித்
 தூயபொன் சிந்தி நிதிநிரப்பி
இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும்
 எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
அந்தரர் கோன்அயன் தன்பெருமான்
 ஆழியான் நாதன்நல் வேலன்தாதை
எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்கு
 ஏய்ந்தபொற் சுண்ணம் இடித்துநாமே. 3 


காசணி மின்கள் உலக்கையெல்லாம்
 காம்பணி மின்கள் கறையுரலை
நேச முடைய அடியவர்கள்
 நின்று நிலாவுக என்றுவாழ்த்தித்
தேசமெல் லாம்புகழ்ந் தாடுங்கச்சித்
 திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப்
பாச வினையைப் பறித்துநின்று
 பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 4 


அறுகெடுப் பார்அய னும்மரியும்
 அன்றிமற் றிந்திர னோடமரர்
நறுமுறு தேவர் கணங்கெளெல்லாம்
 நம்மிற்பின் பல்லதெ டுக்கவொட்டோம்
செறிவுடை மும்மதில் எய்தவில்லி
 திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி
முறுவற்செவ் வாயினீர் முக்கண அப்பற்கு
 ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 5 


உலக்கை பலஓச்சு வார்பெரியர்
 உலகமெ லாம்உரல் போதாதென்றே
கலக்க அடியவர் வந்துநின்றார்
 காண உலகங்கள் போதாதென்றே
நலக்க அடியோமை ஆண்டுகொண்டு
 நாண்மலர்ப் பாதங்கள் சூடந்தந்த
மலைக்கு மருகனைப் பாடிப்பாடி 
 மகிழ்ந்துபொற் சுண்ணம் இடித்துநாமே. 6 


சூடகந் தோள்வளை ஆர்ப்பஆர்ப்பத்
 தொண்டர் குழாமெழுந் தார்ப்பஆர்ப்ப
நாடவர் நந்தம்மை ஆர்ப்பஆர்ப்ப
 நாமும் அவர்தம்மை ஆர்ப்பஆர்ப்பப்
பாடக மெல்லடி யார்க்குமங்கை
 பங்கினன் எங்கள் பராபரனுக்கு
ஆடக மாமலை அன்னகோவுக்கு
 ஆடப் பொற்சுண்ணம் இடித்துநாமே. 7 


வாட்டடங் கண்மட மங்கைநல்லீர்
 வரிவளை ஆர்ப்பவண் கொங்கை பொங்கத்
தோட்டிரு முண்டந் துதைந்திலங்கச்
 சோத்தெம்பி ரான்என்று சொல்லிச்சொல்லி
நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி
 நாயிற்க டைப்பட்ட நம்மையிம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி
 ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 8 


வையகம் எல்லாம் உரலதாக
 மாமேரு என்னும் உலக்கைநாட்டி
மெய்யெனும் மஞ்சள் நிறையஅட்டி
 மேதகு தென்னன் பெருந்துறையான்
செய்ய திருவடி பாடிப்பாடிச்
 செம்பொன் உலக்கை வலக்கைபற்றி
ஐயன் அணிதில்லை வாணனுக்கே
 ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 9 


முத்தணி கொங்கைகள் ஆடஆட
 மொய்குழல் வண்டினம் ஆடஆடச்
சித்தஞ் சிவனொடும் ஆடஆடச்
 செங்கயற் கண்பனி ஆடஆடப்
பித்தெம் பிரானொடும் ஆடஆடப்
 பிறவி பிறரொடும் ஆடஆட
அத்தன் கருணையொ டாடஆட
 ஆடப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 10 


மாடு நகைவாள் நிலாவெறிப்ப
 வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப்
பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்
 பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித்
தேடுமின் எம்பெரு மானைத்தேடி
 சித்தங் களிப்பத் திகைத்துத் தேறி
ஆடுமின் அம்பலத் தாடினானுக்கு
 ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 11 


மையமர் கண்டனை வானநாடர்
 மருந்தினை மாணிக்கக் கூத்தன் தன்னை
ஐயனை ஐயர்பிரானை நம்மை
 அகப்படுத் தாட்கொண்டருமைகாட்டும்
பொய்யர்தம் பொய்யனை மெய்யர்மெய்யைப்
 போதரிக் கண்ணிணைப் பொற்றொடித்தோள்
பையர வல்குல் மடந்தைநல்லீர்
 பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 12 


மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
 வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர்
என்னுடை ஆரமுது எங்கள் அப்பன்
 எம்பெரு மான்இம வான்மகட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன்
 தமையன்எம் ஐயன் தாள்கள்பாடிப்
பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்
 பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே. 13 


சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத்
 தாழ்குழல் சூழ்தரு மாலையாடச்
செங்கனி வாய்இத ழுந்துடிப்பச்
 சேயிழை யீர்சிவ லோகம்பாடிக்
கங்கை இரைப்ப அராஇரைக்குங்
 கற்றைச் சடைமுடி யான்கழற்கே
பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப்
 பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே. 14 


ஞானக் கரும்பின் தெளிவைப்பாகை
 நாடற் கரிய நலத்தை நந்தாத்
தேனைப் பழச்சுவை ஆயினானைச்
 சித்தம் புகுந்து தித்திக்கவல்ல
கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
 கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப்
பானல் தடங்கண் மடந்தைநல்லீர்
 பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 15 


ஆவகை நாமும்வந் தன்பர்தம்மோடு
 ஆட்செயும் வண்ணங்கள் பாடிவிண்மேல்
தேவர்க னாவிலுங் கண்டறியாச்
 செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச்
சேவகம் ஏந்திய வெல்கொடியான்
 சிவபெரு மான்புரஞ் செற்றகொற்றச்
சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச்
 செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே. 16 


தேனக மாமலர்க் கொன்றைபாடிச்
 சிவபுரம் பாடித் திருச்சடைமேல் 
வானக மாமதிப் பிள்ளைபாடி
 மால்விடை பாடி வலக்கையேந்தும்
ஊனக மாமழுச் சூலம்பாடி
 உம்பரும் இம்பரும் உய்யஅன்று
போனக மாகநஞ் சுண்டல்பாடிப்
பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே. 17 


அயன்தலை கொண்டுசெண் டாடல்பாடி
 அருக்கன் எயிறு பறித்தல்பாடி
கயந்தனைக் கொன்றுரி போர்த்தல்பாடிக்
 காலனைக் காலால் உதைத்தல்பாடி
இயைந்தன முப்புரம் எய்தல்பாடி
 ஏழை அடியோமை ஆண்டுகொண்ட
நயந்தனைப் பாடிநின் றாடி யாடி
 நாதற்குச் சுண்ணம் இடித்துநாமே. 18 


வட்ட மலர்க்கொன்றை மாலைபாடி
 மத்தமும் பாடி மதியும்பாடிச்
சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்
 சிற்றம்ப லத்தெங்கள் செல்வம்பாடிக்
கட்டிய மாசுணக்கச்சைப் பாடிக்
 கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல்
இட்டுநின் றாடும் அரவம்பாடி
 ஈசற்குச் சுண்ணம் இடித்துநாமே. 19 


வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
 மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச்
சோதியு மாய்இருள் ஆயினார்க்குத்
 துன்பமு மாய்இன்பம் ஆயினார்க்குப்
பாதியு மாய்முற்றும் ஆயினார்க்குப்
 பந்தமு மாய்வீடும் ஆயினார்க்கு
ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு
 ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 20
    ****************

  சிவபுராணம்
 அ௫ளியவர் : மாணிக்கவாசகர்
 திருமுறை : எட்டாம் திருமுறை
 நாடு : பாண்டியநாடு
 தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
 சிறப்பு: சிவனது அநாதி முறைமையான பழமை; கலிவெண்பா.


திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5

வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10

ஈசனடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15

ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் 20

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35

வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40

ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 1 
 

திருச்சிற்றம்பலம்

பட்டினத்தார் - ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
-------------------------------------------
ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து

பனியில் ஓர் பாதி சிறு துளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதுமம் அரும்பு கமடம் இதென்று
பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்ற

உருவமும் ஆகி உயிர் வளர் மாதம்
ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரம் அகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து

ஒளிந்கை ஊறல் இதழ் மடவாரும்
உவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியில் இருந்து மழலை மொழிந்து
வா இரு போ என நாமம் விளம்ப

உடைமணி ஆடை அரைவடம் ஆட
உண்பவர் தின்பவர் தங்களொடு உண்டு
தெருவில் இருந்து புழுதி அளைந்து
தேடிய பாலரொடு ஓடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே

உயர் தரு ஞான குரு உபதேச
முந்தமிழின் கலையும் கரை கண்டு
வளர்பிறை என்று பலரும் விளம்ப
வாழ் பதினாறு பிராயமும் வந்து

மதனசொரூபன் இவன் என மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழி கொண்டு சுழிய எறிந்து
மாமயில் போல் அவர் போவது கண்டு

மனது பொறாமல் அவர் பிறகு ஓடி
தேடிய மாமுதல் சேர வழங்கி
வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்து இருகண்கள் இருண்டு

வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவிரோத குரோதம் அடைந்து
செங்கையினில் ஓர் தடியுமாகியே
வருவது போவது ஒருமுதுகூனு

மந்தி எனும்படி குந்தி நடந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து
வாய் அறியாமல் விடாமல் மொழிந்து
கலகல என்று மலசலம் வந்து

கால்வழி மேல்வழி சாரநடந்து
கடன்முறை பேசும் என உரைநாவு
தங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து
கடைவழி கஞ்சி ஒழுகிடவந்து

பூதமுநாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே
வளர்பிறை போல எயிரும் உரோமம்
உச்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்சு

மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல் யமதூதர்கள் வந்து
வலைகொடு வீசி உயிர்கொடு போக
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து

மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலம் அறிந்து
வரிசை கெடாமல் எடும் எனஓடி
வந்து இள மைந்தர் குனிந்து சுமந்து

கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகுஇடை மூடி அழள் கொடுபோட
வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்

உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே....

இறப்பு என்று கூறும்போது ‘இல்லாமல் போய்விடுகிறது’ என்று அர்த்தம் கொள்ளப்படுவதிலும் பார்க்க ஒரு சாதனை முடிவுக்கு வந்து விட்டதென்று கொள்ளப்படுவதே சரியானது. இந்து மதமும் இதனையே இடித்துரைக்கிறது. இவ்வுலகில் ஆத்மா வெவ்வேறு பிறப்புக்களை எடுத்து வாழ்வியல் என்னும் இயக்க முறைமை ஊடாக இறப்புப்பினைச் சந்தித்து வருகின்றது. ஆகவே, மனித வாழ்வில் இறப்பு என்ற இயற்தொழிற்பாடும் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றென எம்முன்னோர் கருதியதனால்தான் இதனையும் ஒரு வாழ்வியல் சடங்காக ஏற்று சிறப்பித்து வருகின்றார்கள். இந்து நெறிமுறைகளின் பிரகாரம் பூதவுடலை எரித்து விடுவது பொதுவானது. ஐம்பெரும் பூதங்களிலாலான உடலானது உயிரை விட்டுப் பிரிந்து சென்றதும் அது மீண்டும் பௌதிகத் திரட்சியாகி விடுகிறது. பின்னர் அதுஇயற்கையின் தொழிற்பாட்டு முறைமைக் குட்பட்டு விரைவாகவோ அல்லது தாமதமாகவோ திரட்சித் தன்மையினின்றும் நீங்கி நீர், காற்று, வாயு, நெருப்பு, ஆகாயம் என்னுமிவற்றோடு மீண்டும் கலந்து சங்கமமாகி விடுகிறது.

உறவினர் ஒருவரோ அல்லது வேண்டியவரோ இறந்து விட்டால் தமிழ் மக்கள் இதனை ஒரு சடங்காக ஏற்று சிறப்பாகச் செய்து விடுவார்கள். இதனை இறுதி மரியாதை அல்லது ஈமக்கடன் என்பார்கள். மரணம் இடம் பெற்ற வீடு ‘இழவு வீடு’ எனப்படும். அன்று அவ்வீட்டில் சமையல் ஏதும் நடைபெறமாட்டாது. உற்றாரும் உறவினரும் கூடி ஆகவேண்டிய புறக்கிருத்தியங்களைச் செய்து உதவுவார்கள். தூரத்து உறவினருக்கு செய்திப்பரிவர்த்தனை செய்து அழைப்பு விடுப்பார்கள். பிற ஊர்களிலிருந்து உறவினரை எதிர்பார்ப்தாகவிருந்தால் பிரேத அடக்கம் செய்வதற்கு சிலசமயம் பல மணித்தியாலயங்கள் அல்லது நாட்கள் கூட எடுக்கும்.

ஒருவர் இறந்த உடனே மனிதர் என்ற நிலையைக் கடந்து பிணம் அல்லது சடலம் என்ற பெயரைச் சமுதாயம் அவருக்குச் சூட்டுகிறது. இறந்தவுடன் அவர் வாயில் மண்ணெண்ணெய் உப்பு இரண்டையும் கலந்து ஊற்றுவார்கள்.

எட்டுக்கட்டு

மனிதன் இறந்தவுடன் எட்டு இடங்களில் கட்டுப் போடுவார்கள். இது ‘எட்டுக்கட்டு” என்று கூறப்படும்.

1. இரண்டு கை பெருவிரல்களையும் இணைத்துக் கட்டுவது “கைக்கட்டு”.

2. காலிலுள்ள பெருவிரல்களையும் இணைத்துக் கட்டுவது “கால்கட்டு”.

3. வாயில் வெற்றிலை சீவல் கசக்கி வைத்து துணியால் வாயை மூடிய வண்ணம் கட்டுவது “வாய்க்கட்டு”.

4. தளர்ந்து வரும் தசைப் பிண்டங்களையும் வாயுடன் ஒருங்கிணைத்துக் கட்டுவார் “நாடிக்கட்டு”.

5. தொப்புள் வழியாகக் காற்று புகுந்து வயிறு புடைத்துவிடாமல் கட்டுவது “தொப்புள் கட்டு”.

6. நாடிக்கட்டையும் வாய்க்கட்டையும் இணைத்து, அவை வெளியில் தெரியாமல் மூடி தலை முடியையும் மறைத்து முகம் மட்டும் தெரியும்படியாகக் கட்டுவார்கள். இது “தலைக்கட்டு”.

7. முழங்கால் இரண்டையும் இணைத்து உடல் நேர்க்கோட்டில் அமையும்படி கட்டுவது “முழங்கால் கட்டு”.

8. ஆண்களின் பிறப்புறுப்பை மறைத்துக் கட்டப்படும் கட்டு “கோவனக் கட்டு”.

இம்முறை பெண்களுக்கும் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்த பின் இறந்தவரின் முகம் தெற்குப் பக்கம் பார்க்கும்படி வைக்கப்படுகிறது.

இறந்தவரின் நெற்றியில் காசு வைக்கப்படுகிறது. ஏழையாக இருந்தாலும் செல்வந்தராக இருந்தாலும் ஒரு ரூபாய் காசு மட்டும் வைக்கப்படும்.

பிரேத அடக்கம் செய்யவென்று நிச்சயிக்கப்பட்ட நாள் அதிகாலையில் பிரேதத்தை கழுவி நன்கு அலங்கரித்து வாசனைத் திரவியங்கள் தடவி ஒரு கட்டிலில் அல்லது உயரமான பீடத்தில் தென்மேற்கு – வடகிழக்கு திசையாக கால்மாடு / தலைமாடு பார்த்துத் தாபனம் பண்ணி படுக்கையில் வைப்பார்கள். இதனை ‘ஒப்பித்தல்’ என்று சொல்லுவர். தென்மேற்கு மூலையை சாமூலை என்று கூறப்படுவதும் கவனிக்கத்தக்கது. சலவைத்தொழிலாளி வந்து காலையில் மூன்று நிறைகுடங்களில் மாவிலை தேங்காய் வைத்து வீட்டு வாயிற் கூரையில் நெல்மணிகளைப் பரப்பி அதன்மீது அக்கும்பங்களை வைப்பான். கும்பங்களின் மேலாக ஒரு சேலையால் சுற்றி அலங்கரித்து மூன்று குஞ்சங்கள் கீழே தொங்கத் தக்கதாக விடப்படும். இதனைக் ‘கூரைமுடி வைத்தல்’ என்பார்கள்.

அன்று காலை ஆறு மணி சுமாருக்கு பறைமேளம் வரவழைக்கப்பட்டு வீட்டுக் கோடியில் ஓர் இடத்தில் இருத்தி வாசிக்கப் பட்டுக் கொண்டே இருக்கும். இனபந்துக்கள் ஒவ்வொருவரும் வீட்டில் உள்நுளையும் போதும் பிரேத மரியாதையை தெரிவிக்க பறைமேளத்தால் துக்கராகம் வாசித்து தெரியப்படுத்தப்படும். பிரேதம் குளிப்பாட்டப்பட்டு ஒப்புவிக்கப்பட்டிருந்தாலும் இறுதிக்கட்ட நடவடிக்கையாக அதனை வீட்டிலிருந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லும்போது சோடனைகளுடனான வண்டிலில் வைத்தே கொண்டு செல்வர். பிரேத அடக்கமானது சைவாகம விதிமுறைகளுக்குட்படுத்தி கிருத்தியங்கள் செய்து அக்கினி பகவானுக்கு ஒப்புவித்தலாகும் .

விளக்கேற்றி பிரேதம் ஒப்பித்து வைக்கப்பட்டுள்ள இடத்தைச் சூழ்ந்து இறந்துபோனவரின் உறவினர்கள் அதிகமாக பெண்கள் கண்ணீர்மல்க கதறி அழுதவண்ணமிருப்பார்கள். இறுதி மரியாதை செலுத்த வரும் ஏனைய பெண்களும் அவர்களோடு இங்கு வந்து அமர்ந்து கொண்டு இறந்துபோனவருக்காகத் தங்கள் அனுதாபங்களை வெளிப்படுத்துவர். படிப்பறிவில்லாத பெண்கள் பிலாக்கணம் என்ற வடிவிலமைந்த இரங்கல் பாடலை ஒப்பாரியை எதுவித முன்ஆயத்தமும் இன்றி மிக அழகாகப் பாடி அழுதுகொண்டிருப்பர். இவ்வழுகைப் பாடலில் இருந்து இறந்து போனவர் பற்றிய பல விடயங்களை தெரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். ஆண்கள் வெளியே பாடைகட்டுதல், சோடனைப் பொருட்கள் கொள்வனவு செய்தல், தென்னங்குருத்து, இளநீர் பறித்தல் ஆகிய பணிகளில் குழுக்களாக இணைந்து தாமாகவே செய்து முடிப்பர்.

புரோகிதர் வந்தபின் அவரின் ஆலோசனைப்படி வாய்க்கரிசி போடுதல், எண்ணெய் வைத்தல், பொற்சுண்ணம் இடித்தல் ஆகியனவற்றை அவ்வப்போது செய்து முடிப்பர். இறுதியாக பிரேதம் பாடையில் வைத்து உறவினர் நான்குபேர் மாறி மாறி மயானத்திற்கு ஊர்வலமாகத் தூக்கிச் செல்வர். இதன்போது பறைமேளமும் குழலிசையும் கலந்திருக்கும். ஒவ்வொரு சந்தியிலும் தரித்து நின்று பறைமேள வாசிப்பு அதற்குரித்தான இராக பாவங்களோடு இசைக்கப்படும். சீனவெடி கொழுத்தப்படும். பிரேத ஊர்வலத்தின்போது காலஞ்சென்றவரின் மூத்தமகன் அல்லது இளைய மகன் கொள்ளிக்குடம் எடுத்துச் செல்வான். தந்தைக்கு தலைமகனும் தாய்க்கு கடைமகனும் இக்கடனைசெய்ய வேண்டுமென்பது சம்பிரதாயம். தற்போது பிரேதம் வாகனத்தில் வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதோடு சிவபுராணம் பட்டினத்தார் பாடல் முதலான தோத்திரப் பாடல்கள் பாடப்பட்டுக் கொண்டே ஊர்வலம் நகர்ந்து செல்லும். மயான பூமியை அடைந்ததும் பிரேத பாடையை ஓர் இடத்தில் இறக்கி வைப்பார்கள். பெட்டியைத் திறந்து பிரேதத்திற்கு போடப்பட்டுள்ள தங்க ஆபரணங்கள் ஏதும் இருப்பின் அவற்றை எல்லாம் நாவிதர் வேறாக தேர்ந்தெடுத்து இறந்துபோனவரின் இரத்த உறவினரிடம் கையளிப்பார்.

வீட்டில் பிரேதம் இருந்தபோது மரியாதையை நிறைவேற்ற முடியாமல் போய்விட்ட எவரும் மயானத்திற்கு வருகை தந்திருந்தால் அவர்கள் பிரேதத்தைத் தரிசிப்பதற்கு இடம்கொடுப்பார்கள். விறகுகள் அடுக்கி முகம் மட்டும் தெரியும்படி வைத்து விடுவார்கள். கொள்ளி வைப்பவர் மொட்டையடித்து மீசை வழித்து குளித்து விட்டு திருநீரால் நெற்றி, மார்பு, கை, முதுகு போன்ற பகுதிகளில் பட்டைப் போட்டு வருவார். மூன்று முறை சுற்றி, அரிசியைப் பிணத்தின் வாயில் போட்டு(இறக்கும் தறுவாயில் உணவு உட்கொண்டு பசிபோக்கி உயிர்நீத்தாரோ இல்லையோ பசியோடு எவரும் இவ்வுலகை விட்டுப் புறப்பட்டுச் செல்லக் கூடாது என்பது இந்துதருமம். இறுதியாக இப்பூவுலகத்தை விட்டுச் செல்லும் ஆத்மாவுக்கு பசிப்பிணி எதுவுமின்றி தன் ஆத்ம பயணத்தைத் தொடரும் வகையிலேயே வாய்க்கரிசி போடுதலும் பாலூற்றுதலும் இடம்பெறுகிறது.), கொள்ளி வைப்பவர் நீர்கலையத்துடன் இறந்தவரை (பிணத்தை) மூன்று முறை சுற்றி வருவார். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு துவாரம் அந்தக் கலையத்தில் போடப்படும். பிறகு பிணத்தின் தலைப் பகுதியில் நின்று பின்பக்கம் திரும்பி கொள்ளி வைத்து விட்டு மாயானத்தை விட்டு வெளியேறுவார்.

வெற்றிலை எடுத்துச் செல்லல்

மரணவீட்டுக்கு வரும் பெண்கள் தனியாகவோ கூட்டாகவோ இணைந்து வெற்றிலை, பாக்கு, புகையிலை என்பவற்றை தம்மோடு எடுத்துச் செல்வார்கள். இதற்குப் பலகாரணங்கள் இருந்தாலும் அவற்றில் முக்கியமான காரணங்கள் பலவாகும். இன்பத்திலும் துன்பத்திலும் அத்தியாவசியம் இருக்க வேண்டியவை. ஆகாரம் அற்று இருப்பவருக்கும் உடலில் உற்சாகத்தை ஊட்டவல்ல வஸ்துக்கள். இழவு வீட்டில் வந்து சேருவோருக்கு உணவு கிடைக்க வசதிகள் இல்லை. நீண்டநேரம் உதவுவோர்க்கு வெற்றிலை பாக்கு ஒரு ஊக்கச் சக்தியாக அமையும் என்பதும் அதற்கான ஏனையோரின் பங்களிப்பும் அதுவாகும்.உறவினர் வீட்டுக்குச் செல்லும்போது கையுறையாக எதையும் எடுத்துச் செல்லவேண்டும் என்பது எமது பண்பாட்டு வழிமுறை இழவு வீட்டில் எடுத்து செல்வதற்கு இதனை விட வேறொன்றும் இல்லாத தன்மையால் இவ்வாறு வெற்றிலை, பாக்கு, புகையிலை என்பவற்றைக் கொண்டு செல்லுகின்றனர். மயான பூமியிலிருந்து ஆட்கள் திரும்பி வந்து கலைந்து சென்ற பின்பு அவ்வீட்டாருக்குச் உறவினர்கள் அல்லது அயலவர்கள் கூடி வீட்டில் தொடர்ந்து அழுது புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் கூறி அரவணைத்து அவர்களைத் தலைமுழுகச் செய்து அன்ன ஆகாரம் புசிக்கச் செய்வர்.

பிரேதம் எடுத்த நாள் தொடக்கம் எட்டாம் நாள்வரை தொடர்ந்து இரவு நேரத்தில் அவ்வீட்டு முற்றத்தில் தீ எரிந்து கொண்டே இருக்கும். பெரிய மரக்கட்டையை இதற்கு பயன் படுத்துவர். இதனை ‘காவல்கட்டை’ என்று அழைப்பார்கள். இரவு வேளையில் பேய் பிசாசுகள் நெருங்கா திருப்பதற்காக என்றே இவ்வேற்பாடு செய்யப்படினும் அன்றைய காலக் கட்டத்தில் மனித மனங்களில் நிறைந்திருந்த பயம், மூடநம்பிக்கை கற்பனை என்பவற்றை ஓரளவிலேனும் போக்கும் ஒரு வழி முறையாகவே இதனைக் கொள்ள வேண்டும்.

இறந்த நாளிலிருந்து மூன்றாம் நாள் பால் தெளிக்கும் பழக்கம் உள்ளது. இதனை காடமர்த்துதல் என்று கூறுவர். பால் அரைத்த வசம்பு, இளநீர், தேங்காய், சூடம் போன்றவற்றை வீட்டிலிருந்து எடுத்துச் சென்று எரித்த இடத்தில் பால், வசம்பு போன்றவற்றைத் தெளிப்பார்கள். ஆண்கள் மட்டும் சுடுகாட்டுக்குச் செல்கின்றனர். பெண்கள் இறந்தவரின் இடத்தில் பாலை வைத்து வணங்கி விட்டு அழுது விட்டும் அப்பாலை இறந்தவரின் இடத்திலோ குளத்திலோ ஊற்றி விடுகின்றனர்.

இறந்தவருக்கு எட்டாம் நாள் “எட்டுக் கும்பிடுதல்” என்று ஒரு சடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இறந்த அன்றே இச்சடங்கு தெரிவிக்கப்படுகிறது. அன்றைய நாளில் பழங்கள், இனிப்பு வகை, பலகாரம், பூ போன்றவற்றை வாங்கி வருவார்கள். மாமன் வீட்டு அரிசி, மைத்துனன் வீட்டு அரிசி, பங்காளி வீட்டு அரிசி ஆகிய மூன்று வீட்டு அரிசியும் போட்டு, பொங்கல் அல்லது கஞ்சி வைப்பார்கள். இறந்தவரை நினைத்து அவருக்குப் பிடித்தமான உனவு வகைகளை வைத்துப் படையலிடுவார்கள் ஒப்பாரி வைத்து அழுவார்கள், அவர் மீது தண்ணீர் தெளித்து ஒப்பாரி நிறுத்தப்படும். கொள்ளி வைத்தவர் பொங்கலைப் புறங்கையால் மூன்று முறை எடுத்து இலையில் போட்டு வணங்குவார்.

முப்பத்தோராம் நாள் வரை வீட்டில் எந்நேரமும் இனபந்துகளின் வியாபகம் நிறைந்திருக்கும். இது இழவு வீட்டாரின் ஏக்கம், தனிமை, என்பவற்றைப் போக்க உதவுமோர் சிறந்த ஒளடதமாகும். இந்த நாட்களில் பலர் கூடுவதால் 8ம் நாள் நிகழ்வு,அன்றைய தினம் சிறு அளவில் ஒரு அன்னதான வைபவம் இடம்பெறும். எரிந்து சாம்பலாகி விட்டபின் எஞ்சிய ஆஸ்திகளைச் சேகரித்து கடலில் கரைத்து விடும் நிகழ்வும் அன்று நடைபெறும். மிகுதி ஆஸ்தியை பத்திரமாக ஒருமுட்டியில் இட்டு பாதுகாப்பாக வைத்திருந்து புண்ணிய நதி தீரங்களில் பின்னர் கரைக்கப் படுவதுவும் உண்டு.

31ம் நாள் அன்று அந்தியேட்டி வைபவம் அன்னதானத்துடன் இடம்பெறும். அன்றுதான் துடக்கு முற்றாக அகற்றப்பட்டு திருநீறு அணியும் தகைமை வீட்டாருக்கு வந்து சேரும். சிலர் 8ம் நாள் இரவு மற்றும் 30ம் நாள் இரவு வேளைகளிலும் சில வேள்விகளை படையலாகச் செய்து இறந்த ஆத்மாவுக்கு நிவேதனம் செய்வர்.

ஒரு வருடம் கழித்து இறந்த நாளில் மீண்டும் இறந்தவரை நினைத்து அவருக்குப் பிடித்தமான உணவு வகைகளை வைத்துப் படையலிடுவார்கள். இதில் உறவுக்காரர், பங்காளி உறவுமுறையோர் கலந்துக் கொள்வார்கள், ஆண்டுக்கு ஒரு முறை திவசம் (திதி) கொடுக்கும் வழக்கம் உண்டு. இந்தச் சடங்கு முறைகளை இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர். நாம் முன்னோருக்கு ஆண்டுக்கு ஒரு முறை திவசம் (திதி) கொடுப்பது நாள்தோறும் கொடுப்பது போன்றது. நமக்கு ஓர் ஆண்டு என்பது அவர்களுக்கு ஒரு நாள் கணக்காகும் என்பது மக்கள் நம்பிக்கை.

Share