தாயகக் குரல்
புத்தி சொல்ல வந்த சுயநலத்தின் உச்சங்களே,
புழுகைக் கத்திச் சொல்ல வந்த கருத்தாளர்களே,
நான் நடுநிலமை நாட்டாண்மை எனும்
நாடக முகமூடி தரித்த பொய்யர்களே,
தன்னலம் தன் பெயர் மட்டும் முன்னிறுத்த முயன்று
தடுக்கப்படின் திருப்பிக் கேட்கும் கருப்புப்பண முதலைகளே,
உதவி என்ற பெயரில் எமக்கு ஆணையிட்டு
உம்மை உயரிய மனிதனாக்கவும்
எமக்கு பெரிய மனிதனாகவும் மாற முயல்கின்ற
எத்தர்கள் பலர் வேசம் கிழிந்து விட்டது.
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
வேண்டவே வேண்டாம்
உதவி என்ற பெயரில் சிலரின்
உபத்திரவ அரசியல் இங்கு வேண்டாம்
எம்மைப் பிரித்தீர் இரண்டாய்
எம் பிரிவினைக்கு நெய் ஊற்றி
அதை அணையாமல் பார்ப்பது போதாதா
அஃதுடன் இன்னுமா பிரச்சனை தருவது.
வெளிநாட்டுப் பணம் மட்டும் போதுமா
வேதியல் கல்வி உடலியல் உளவியல்
சமூக அபிவிருத்தி எல்லாம் இங்கு வருமா
சனத்தின் சுபீட்சத்திற்கு வழிகோல ஆளுண்டா
கிராமத்தின் பெயருக்கு அடிபடும் நேரத்தை ஏன்
கிராம அபிவிருத்திக்கு செலவிட முடியவில்லை
எவனுக்காக எதுவும் விட்டுக்கொடுப்போம்
எதிரிக்காக எதையும் இழப்போம்
எம்மவருக்காக துளிகூட விட்டுத்தரோம்
எல்லாம் எம் விதி எம் சமூக அறீவீனம்
பெருவம்சம் சிறு வம்சம் படித்தவன் பாமரன்
பெரும் பெரும் வேலிகள் எம்மிடையே
எமக்குச் சொல்லித் தரவேண்டிய மூத்தோர்
எவ்விதம் தம்கண்களைக் கட்டிக்கொண்டனர்.
தம் பக்கம் என்று எவ்விதம் சுருங்கிக்கொண்டார்கள்
தகிடுதத்தம் எல்லாம் எவ்வாறு முதலாளிகள் ஆயினர்
எம் சுயமரியாதையை சோதிக்காதீர்
எம் பிளவை ஊக்குவித்தது….
உம் வரட்டு சித்தாந்தங்களை இங்கு விதைக்காதீர்
உம் தனிமனித சுயநல வேட்கைக்கு…..
உதவி செய்யமுடியாவிட்டாலும்
உபத்திரவமாவது தராதிரும்
உணர்வுடன்
ஓர் குடிமகன்