ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் கவிதைகள்

சுலபமாய்க் கடப்பரன்றோ!
24.சுலபமாய்க் கடப்பரன்றோ! ———————– தற்பெருமையின் முடிவுதா னென்றுங் கண்ணியத்தின் தொடக்கமாகக் குலப்பெருமை பேசுகின்ற மனிதருங் கொள்கையில் பற்றிலாதவராக விற்பன்னராய் அறிவிலே சிறந்து மிளிர்கின்ற மனிதர் சிலர் நாத்திகராய் இறைவனை இகழ்ந்துவிட்டால் நுண்ணறிவுடையோராகியவர் நூலொடு பழகினாலுங் கற்றதனால் என்னபயன் என்றே பாமரருங் கைகொட்டிச் சிரிக்க இடியையும் புயலையும் ஒருமனதாக அனுபவிப்போர் குடும்பமெனும் பெருங்கடலைச் சுலபமாய்க் கடப்பரன்றோ!
நிம்மதியும் கோலோச்சும்
23.நிம்மதியும் கோலோச்சும் ———————————— வாழ்க்கை என்னும் கணக்கில் நாமும் நண்பர் தமைக் கூட்டி விட்டே தாழ் விலே மனந்தான் வீறு கொள்ள எதிரி தமை என்றும் கழித்து விட்டே வாழ்வுதான் கவிதை போல் என்றே மகிழ்ச்சி தமை என்றும் பெருக்கி விட்டே அன்பு தமை என்றும் வகுத்து விட்டால் பிறந்தபயன் பூர்த்தி யாகும் நிம்மதியும் கோலோச்சும்.
முயற்சி திருவினையாக்கும்!
22.முயற்சி திருவினையாக்கும்!
—————————-
எதையாவது நான் முயற்சி     செய்ய
அதையே நான் செய்து முடிக்க
அந்த இரவில் எனது மனம்
என் செயற்பாட்டை நிம்மதியாக அசைபோடும்
மரியாதையை விதைப்பவன்தான்
நட்பை அறுவடை செய்வான்
அன்பைப் பயிர் செய்பவன்தான்
அருளைக் கொய்திடுவான்
பகவரை நண்பராகக் கருதுபவன்தான்
பண்பாளனாய் மிளிர்ந்தே நன்கு
உலகினை என்றும் அவனால்
இலகுவில் வசப்படுத்த முடியும்
மனதில் என்றும் இளைஞனாக இரு
அறிவில் முதிர்ந்த கிழவனாக இரு
எண்ணங்களைச் சம்பவமாக்கி அரசியல் செய்
சம்பவங்களை எண்ணங்களாக்கி இலக்கியம் படை!
மாறிடுவோம் நன்றே!
21.மாறிடுவோம் நன்றே!
-------------------------------------
இளமையிலே நாமிழைத்த இழிசெயல்கள் என்றும்
முதுமையிலே எம்முறக்கமதைக் கலையவைத்தே
சிந்தையிலே அச்செயல்கள் சூழ்ந்து கொள்ள
முந்தைவினை தீர்க்கவென்றே மழுமூச்சாய் இறங்கிவிடும்!

நல்லவற்றை நாமும் நாளும் செய்யின்
பொல்லாத நினைவுகளும் முதுமையிலே மீளாமல்
மனத்தினிலே மனவழுத்த மேது மின்றித்
தினந்தினமுந் தூக்கமது தானாய்த் தழுவும்!

ஆண்டவன் சந்நிதியிற் படைக்கின்ற பொங்கலும்
மீண்டபின் பிரசாதமென மாறுதல் போன்றே
தடம்போடுந் தெய்வந்தனைத் தரிசிக்க என்றும்
புடம்போட்ட தங்கமென மாறிடுவோம் நன்றே!
பலதுங்கற்றே வளர்ந்திடு!
20.பலதுங்கற்றே வளர்ந்திடு!
_________________________

தாயைப் பார்த்துப் பெண்ணெடு
 தரத்தைப் பார்த்து வரனெடு
நோயைக் கூறி மருந்தெடு
 நோன்பிருந்தே நலன் பெறு!

சேயைப் பேணி வளர்த்திடு
 சிறப்பாய்க் கல்வி புகட்டிடு
வாயை அடக்கி்ப் பேசிடு
 வளமாய்ச் சேயை வளர்த்திடு!

பெண்கள் மனதைப் புரி்ந்திடு
 பணிவாய் அவரைப் பேணிடு
கண்கள் பார்த்தே கதைத்திடு
 கனிவாய்ப் பேசக் கற்றிடு!

ஆண்கள் திறனைப் புகழ்ந்திடு
 அவரோ டிசைந்து மகி்ந்திடு
பண்கள் பாடி மகிழ்ந்திடு
 பலதுங் கற்றே வளர்ந்திடு!
கோடி யின்பம் பிறக்குமம்மா!

19.கோடி யின்பம் பிறக்குமம்மா!
——————————

தன்னலமே இல்லாத உள்ளங் கொண்டு
  தரணியிலே தமிழினந்தான் தவிசு பெறப்
பொன்னுலகம் பூமியிலே தோன்ற வேண்டிப்
  போர்க்களமே யில்லாத புதுவுலகந் தன்னில்
பின்னிரவில் விழிக்காத தூக்கம் பெற்றே
  பிழையெல்லாம் மன்னிக்கும் பெருமை கொண்டே
இன்பந்தரும் இன்னிசையை இனிதே கேட்க
  எந்நாளுங் கோடி யின்பம் பிறக்குமம்மா!
வாழ்வுதான் சிறப்பாக அமையும்!

18.வாழ்வுதான் சிறப்பாக அமையும்!
——————-
கற்கின்ற மாணவ மணிகள் என்றும்
கற்றதனைப் பல தடவை சிந்திப்பின்
கற்றவைகள் ஆழ்மனதிற் பதிந்துவிடும்
கற்றவையும் பலகாலந் தேங்கி நிற்கும்!

கற்றவுடன் அவ்விடயம் ஆழ்மனதிற் பதியாவிடின்
கற்றவைகள் மனதை விட்டே யகன்றுவிட
வெற்றிபெற வாய்ப்பின்றி மனமுடைந்து போகத்
தொற்றிவிடும் தாழ்வுணர்வு தவறாமல் எந்நாளும்!

உறங்குமுன் கற்றவற்றை நினைவிற் கொண்டே
கறங்குபோல் அவைதம்மை எம்மனது மீட்பின்
திறந்துவிடும் எம்மனமும் ஆழ்மனதிற் பதிய
உறங்குகின்ற ஆழ்மனமும் அவ்விடயமதை ஏற்கும்!

அறிவோடு உணர்ச்சி சேர்ந்த வாழ்வுதன்னில்
நெறியோடு செய்யுந்தொழில் சிறந்ததென்ற
குறியோடு ஆழ்மனதில் கொள்ள வென்றும்
செறிவோடு வாழ்வுதான் சிறப்பாக அமையும்!

முருகா! முருகா!! முருகாவே!!!

17.முருகா! முருகா!! முருகாவே!!!
———————
கந்தன் திருநா ளவைதம்மில்
கனிவாய்க் கடும் நோன்பிருந்தே
கருதுங் குறைகள் இல்லாதே
கரமே கூப்பு மடியாரும்
சிந்துங் கண்ணீர் ஆறாகச்
சிரசி லேத்திக் கவசமதைச்
செய்த வினைகள் தீர்ந்திடவே
சிந்தை யுருகிப் பாடியழ
எந்தாய்! நீயே யிவைதம்மா
லேழை படூம் நிலைகண்டே
யிரங்கி வந்தே காத்தருளி
யடியா ரவலம் போக்கிடுவாய்!
மந்தா கினியார் தந்தவரே
மாயன் மருகா வானவரே
மனமே யிரங்கி மகிழ்ந்தருளும்
முருகா! முருகா!! முருகாவே!!!

அணிசெய் நனி கொள்வீரே!

16.அணிசெய் நனி கொள்வீரே!
———————————–

சுட்டெரித் தாலிந்த
மேனியும் சாம்பலாய்ச்
சுடுகாட்டு மண்ணிற்சேரும்
பட்டெனப் போயினன்
எனச்சொல்லிச் சொந்த
பந்தமும் வீடு செல்லும்
சுட்டெரியும் மேனியும்
சீராக வேகவென்றே
கட்டையும் புரட்டிவிடும்
கட்டைக்கு வாய்க்குமோர்
பயன்கூட மானிடக்
கட்டைக்கு வாய்ப்பதில்லை!
கண்மூடும் மேனியை
மண்மூடும் முன்னமே
காலத்தை அணிசெய்வீர்!

நியதி
15.நியதி
--------
எப்போதும் யாமிழைக்கும்
 இழிவெலாம் பின்னே
தப்பாது எமை வந்து
 தாக்கியே தீரும்!

தொழிலோடு முன்னேறித்
 தரம் உயர்ந்தாலும்
வழியில்லை இனியென்றே
 விதி கூறலாகும்!

இருளோடு முன்னேறி
 வலை வீசினாலும்
பொருளேதும் இல்லையென்றே
 கடல் கூறலாகும்!

பொருளோடு புகழ் சேரப்
  பகை வந்து சேரும்
ஒருவேளை துயர் நீள
 உடல் அன்று சாகும்!
பதிபக்தி
14.பதிபக்தி
---------------
வஞ்சியேன் என்றவன்றன் னூருரைத்தான்

வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தாள்!

கெஞ்சியான் இரந்திடினும் வஞ்சியேனென்றான்!

வஞ்சியும் அவனுடனினுது வாழ்ந்தாள்!

வஞ்சியேன் வஞ்சியே என்றுரைத்தும்

வஞ்சியான் வஞ்சியை வஞ்சித்தான்!

வஞ்சியோ இறைவனிடம் இறைஞ்சினாள்!

வஞ்சியாய் வஞ்சியாத வள்ளலென்றே!
அவர்கள்!
 13.அவர்கள்!
 __________

தந்திரம் அறிவார் தவறாய்த்
  தர்க்கமும் புரிவார் பிறர்க்குக்
குந்தகங் கொடுப்பதில் என்றுங்
 குறியாய்க் கடுகி நிற்பார்!
எந்திரம் போல இயங்கி
 அவம்தனைப் பேசி உழல்வார்!
அந்திவான் இடியைப் போல
 எவரையும் அதிர வைப்பார்!
பந்தயம் போட்டுப் பார்த்துப்
 பலரிடம் தோற்றார் என்ன
மந்திரம் செய்தாரோ? சிலரின்
 மனதையே சிறையாய்க் கொண்டார்!
தமிழ் காப்போம்! தமிழ் வளர்ப்போம்!!
12.தமிழ் காப்போம்! தமிழ் வளர்ப்போம்!! 
----------------------------------------
தாய்மண்ணில் வாழ்கின்ற தமிழர் என்றும்

  தமிழ்மொழியைத் தலைமுறைக்கு இட்டுச் செல்ல

தூய்மையிலாப் பண்பாட்டில் திளைப்போர் இங்கே

  தாய்மொழியாம் தமிழில் பேசுவதைத் தவிர்க்கின்றார்!

உயர்பதவி வகிக்கின்ற தமிழர் சிலர்

  ஒன்றுகூடும் போது மிங்கே தங்கள்

பெயர்கொண்ட தமிழில் பேசுவதைத் தவிர்க்கின்றார்!

  பிறமொழிதான் கெளரவமெனப் பலர் எண்ணுகின்றார்!

தமிழ்மொழியைத் தம் சிறார்க ளென்றும்

  கற்றிடுதல் கடமையெனச் சிலர் கருதவில்லை!

தமிழ்தன்னைக் கற்கின்ற மாணவரும் பின்னர்

  தம் தலைமுறைக்கும் தமிழ்மொழியைக் கற்பிப்பாரா?

தாய்த்தமிழைத் தலைமுறை தலைமுறையாய் என்றும்

 தொடர்ந்து கொண்டு செல்வாரா மற்றையோரும்?

பொய்யில்லை! நவில்கின்றேன் தமிழரெனும் நாமமிங்கே

 போகின்ற தலைமுறையில் மறைந்து விடுமென்றே!
என்றென்றும் புகழோங்க!!
11.என்றென்றும் புகழோங்க வாழ்வீர்! வளர்வீர்!!

——————————-

மருத்துவத்தைப் பொறியியலை நன்றாய்க் கற்று
 மாந்தர் நலம் காப்பாற்ற முனைகின்ற
கருத்துடைய மாணவர்கள் தோன்ற வேண்டும்!
 கடும் உழைப்பால் தமிழர்புகழ் ஓங்கவேண்டும்!
இருக்கும்வரை தமிழரெல்லாம் அறிவால் இந்த
 உலகத்தையே வியப்படையச் செய்தல் வேண்டும்!
இருண்டிருக்கும் நிலைமாற இனிதே கற்பீர்!
 என்றென்றும் புகழோங்க வாழ்வீர்! வளர்வீர்!!
மற்றிசைப்ப தெல்லாம் வரும்!!!
10.மற்றிசைப்ப தெல்லாம் வரும்!

வருநாள் உயிர்வாழும்வ கையறியோம் நெஞ்சே
ஒருநாளும் நீதீமை செய்யேல் - வருநாளில்
மற்றோர்க்குக் கேடுதனை மறந்தும் செய்யாவிடின்
மற்றிசைப்ப தெல்லாம் வரும்!

(மற்றிசைப்ப தெல்லாம் - விரும்புகின்ற 
மற்றையதெல்லாம் என்று பொருள் படும்)
எதைப் பெறுவார் கச்சியேகம்பனே?!
9.எதைப் பெறுவார் கச்சியேகம்பனே?!
( எண் சீர் விருத்தம் )
_________________

உடையாயுன் னருளுக்கும் அடியார்மேல் கொண்ட
 இடையாதவுன் னன்புக்கும் அவர்பால் பொழியும்
தடையேது மில்லா வுன் கருணைக்கும்
 தீயோர்தான் அஞ்சாமல் அந்தோ! அந்தோ!!
நடையாத உடல்முழுதும் நாவாய்க் கொண்டு
 நவில்கின்றார்; நிதம் தீமை யிழைக்கின்றார்!
இடையாத இடுக்கண் ணவர் பெறுவாரன்றி
 எதைப் பெறுவார் கச்சி யேகம்பனே?!
எங்களூர் ஞாபகங்கள்!

8.எங்களூர் ஞாபகங்கள்!

தூக்கங்கள் கலையும் போதும்
 தாக்கங்கள் தொலைந்த போதும்
ஏக்கங்கள் அகத்தில் தோன்றி
 எங்கெங்கோ செல்லும் போதும்
என்றுணை யோடு கொஞ்சம்
 பூர்வீகம் பேசும் போதும்
என்னையே பிழியு தம்மா
 எங்களூர் ஞாபகங்கள்!
தாய் மடி ஞாபகங்கள்!

7.தாய் மடி ஞாபகங்கள்!

உடம்புகள் அழியும் போதும்
 எச்சங்கள் அழிவ தில்லை
இடம்மாறி வாழும் போதும்
 இதயத்தில் மிதக்கும் எண்ணம்
தடம்மாறிப் போவ தில்லை
 தாய் மடி மறப்பதில்லை!
படம்போடும் ஞாபகங்கள்
 பாதியில் கலைவதில்லை!
எழுதாத கவிதை!

6.எழுதாத கவிதை!

எழுதாத கவிதை எல்லாம்
எழுதி நான் முடித்தபின்பு
உள்ளூறும் எண்ணம் எல்லாம்
உணர்வாக வடித்த பின்பு
தள்ளாத வயதில் என்றன்
தாய்மண்ணில் இருப்பேன் என்பேன்
உள்ளூரில் கல்லறை தன்னை(க்)
கட்டடா மகனே என்பேன்!
எழுந்திராய்!!

5.எழுந்திராய்!!
உறங்கு கின்ற தமிழா! உன்றன் தூய நல்ல வாழ்வெலாம்
இறங்கு கின்ற தின்று காண் எழுந்திராய்! எழுந்திராய்!!
கறங்கு போல உனை யழிக்கும் கயவர் தங்கள் கையிலே
உறஙகினாய் கிறங்கினாய் இனிக் கிடந்தா உறங்குவாய்?

காப்பாற்றக் கூடுமோ கச்சியேகம்பனே?!
4.காப்பாற்றக் கூடுமோ கச்சியேகம்பனே?!

 முள்ளுச் செடியினுள் மாட்டிய குயிலாய்
  மீள முடியாமல் தவிக்கின்ற தமிழா!
தெள்ளத் திறனின்றிப் பதவிதமைத் தமதாக்கி(த்)
  தீமைகள் செய்யுந் தரங்கெட்ட சிலரும்
குள்ளத் தனத்தைத் தம்முயிரில் வரித்தே
  காட்டிக் கொடுக்கின்ற எட்டப்பர் சிலரும்
கள்ள மில்லாத வெம் தாயக உறவுகளை(க்)
  காப்பாற்றக் கூடுமோ கச்சியேகம்பனே?!
வேள்வி
3.வேள்வி
சின்னம்மன் கோவிலில் வேள்வி வருகுது
 சீரினைக் காண வாரு மென்றே
பொன்னன் உரைத்தனன் யானும் எழுந்தனன்
 போகும் வழியிலோர் புதுமை கண்டோம்!
மேளம் முழங்கிட நாதம் இசைத்திட
 மாலை யணிந்த கடா வொன்று
தாளம் ஒலித்திடத் தன்தலை யாட்டியே
 தன்விதி தோணாது தாவியே சென்றது!
அம்மனும் வீதியுலாவும் வரச் சிலர்
 ஆனந்தமாய்க் கூத்தும் ஆடி வந்தார்
அம்பிகை முன்றலில் இருப்பிடம் வந்திட
 ஐயரும் தன்பணி யாற்றி நின்றார்!

அம்மனின் முன்னே வாளுடன் வந்தவர்
 அந்தக் கடாவின் தலையினைக் கொய்திட(த்)
தம்முடல் துடித்தே குருதியும் சீறிட(ச்)
 செத்து மடிந்தன எத்தனை ஜீவன்கள்!
தெய்வங்கள் உயிர்ப்பலி வேண்டின என்றே
 தீமையி்ல் திளைத்தனர் மானிடர் அன்றே!
வாய்மைகள் ஓங்கிடக் கொல்லாமை நன்றென
 வள்ளுவப் பெருந்தகை விளம்பினார் அன்றே!
அன்னையவள்
2.அன்னை
அன்புக்கே நாமடிமை ஆகவேண்டும்
 அறிவுக்கே எம்காது கேட்கவேண்டும்
வன்புக்கே போகாமல் வாழவேண்டும்
 வஞ்சகத்தை எம்நெஞ்சம் அழிக்கவேண்டும்
பண்புக்கே உயிர்வாழப் பழகவேண்டும்
 பரிவுக்கே நாமென்றும் பணியவேண்டும்
திண்மைக்கே இவையெல்லாம் திளைக்கவேண்டும்
 திகட்டாமல் நீ எம்மோடு வாழவேண்டும்!
உன்னிடத்தில் இரக்காமல் வேறு எந்த
 உறவிடத்தில் இரந்திடுவோம் அம்மா எங்கள்
அன்னையவள் நீயிருக்க உலகி்ல் மற்ற
 அன்னியரைக் கெஞ்சிடுதல் முறையோ அம்மா?
கண்ணீரைத் துடைத்துவிடக் கடுகியே வா எம்மைக்
 காத்திருக்க வைத்திடுதல் முறையோ அம்மா?
கண்ணவளே எம் கண்ணீரைத் துடைத்துவிடு
 காலனையே எம்மை விட்டுத் துரத்திவிடு!
மயங்குவதும் ஏனோ
1.மயங்குவதும் ஏனோ
சிலபோது மனம் வெந்து
 சிதையாக மாறும்
பலவேளை சுகந் தந்து
 பதமாக மாறும்

மலை கொண்ட புவிமீது
 மழை வந்து சீறும்
கலைவந்த புயல் நின்று
 கரகாட்டம் ஆடும்!

சிறுவண்டு மலர் மீது
 மது உண்டு மகிழும்
உறுவண்டு இதைக்கண்டு
 உடன் உண்டு மகிழும்

தொழிலோடு முன்னேறித்
 தரம் உயர்ந்தாலும்
வழியில்லை இனியென்று
 விதி கூறலாகும்!

பொருளோடு பகை சேரக்
 கெடு வந்து சேரும்
ஒருவேளை துயர் நீள
 உடல் அன்று சாகும்!

நதி மழை போன்றதே
 விதியென்று கண்டும்
மதி கொண்ட மானிடரும்
 மயங்குவதும் ஏனோ?
Share

Leave a Reply